நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Sunday 26 December, 2010

உயிர்மெய்

பிறப்பு என்பது ஒரு தமிழ்ச் சொல். அது ஓர் உயிரானது உடலோடு சேர்ந்து உலகத்துக்கு வருவதைக் குறிக்கின்றது.
இறப்பு என்பது இன்னொரு தமிழ்ச் சொல். அது இந்த உலகத்தில் உடலோடு சேர்ந்து வாழ்ந்த உயிர், உடலை விட்டு பிரிந்து போவதைக் குறிக்கின்றது.
பிறப்பின் தன்மையையும் இறப்பின் தன்மையையும் இந்த இரு தமிழ்ச் சொற்கள் குறிப்புட்டு காட்டுவதைப் போல பிற மொழியில் உள்ள அதற்கு நேரான சொற்கள் குறிப்பிடுபவனாக இல்லை. பிறப்பு, இறப்பு என்னும் சொற்களில் உள்ள எழுத்துக்களில் முதல் எழுத்தைத் தவிர மற்ற மூன்று எழுத்துக்களும் ஒன்றாகவே உள்ளன.
             
பிறப்பு என்பதில் உள்ள முதல் எழுத்து "பி" இது ஓர் உயிர் மெய் எழுத்து. அதாவது உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து பிறக்கின்ற எழுத்து.
 'ப்' என்பது மெய்யெழுத்து 'இ' என்பது உயிர் எழுத்து. இரண்டும் சேர்கின்ற பொழுது ப் + இ = பி என்று ஆகிறது.

             உலகத்தில் உடலும் உயிரும் சேர்ந்து பிறப்பதைக் குறிக்கின்ற சொல்லில் உள்ள 'பி' என்னும் முதல் எழுத்தே அந்த உண்மையைச் சுட்டி காட்டுகிறது.

பி - என்னும் உயிர்மெய் எழுத்திலிருந்து 'ப' என்னும் மேய்யேளுத்தை நீக்கிவிட்டால், விட்டு விட்டால், தனித்து நிர்ப்பது 'இ' என்னும் உயிர் எழுத்து.
             உடலை விட்டுப் பிரிந்து உயிர் தனித்து நிற்கின்ற நிலைதானே இறப்பு என்பது! இறப்பு என்னும் சொல்லில் உள்ள 'இ' என்னும் முதல் எழுத்தே அந்த உண்மையைச் சுட்டி காட்டுகிறது.
            உயிர் உடலோடு சேர்வது 'பிறப்பு'
            உயிர் உடலை விட்டுப் பிரிவது 'இறப்பு'
         
மெய் என்றால் உடல், மெய்யெழுத்து என்றால் உடல் போன்ற எழுத்து. புள்ளி உள்ள எழுத்து உயிரோடு சேராத உடல் தனித்து இயங்க முடியாது.
  நிற்கவும் முடியாது. இந்த உண்மையைக் காட்டுவது போலத்தான் மெய்யெழுத்து மொழிக்கு முதலில் ஒரு சொல்லின் முதலில் வரக்கூடாது என்று இலக்கணம் கூறுகிறது.
எனவே 'ப்ரேமா'- என்று தமிழில் எழுதக் கூடாது. பிரேமா என்று தான் எழுத வேண்டும்.

Wednesday 15 December, 2010

மனம் பற்றற்றிருக்க...

துறவு என்றால், காவியுடை அணித்து காட்டுக்குப் போய் விடுவது; அல்லது ஏதாவது ஒரு மடத்தில் போய் சேர்ந்து விடுவது; மனைவி மக்களையும் வீட்டையும் விட்டு ஓடி விடுவது என்றுதான் பொதுவாக நாம் எண்ணுகிறோம்.ஆனால், உண்மையில் துறவு என்பது மனத்துறவு தான். மனம் எந்த பொருளிடத்திலும் யாரிடத்திலும் ஒட்டுதல் இல்லாமல் பற்று இல்லாமல் இருப்பது தான்.
            வீட்டில் இருந்து மனைவி மக்களோடு வாழ்ந்தாலும் பற்றில்லாமல் இருக்க வேண்டும். 'நான்' என்கிற செருக்கும் 'எனது' என்கிற பற்றுதலும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்த எந்தப் பொருளிலிருந்து நாம் விலகி இருக்கிறோமோ அந்த அந்தப் பொருளினால் வருகின்ற துன்பம் நமக்கு இல்லை என்பதை உணர்ந்து நம் மனத்தைப் பற்றற்ற நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மனத்தில் பற்றுதலைத் துறக்காமல், துறந்தவரைப் போல வெளிவேடம் அணித்து வஞ்சித்து வாழ்பவரைப் போல் இரக்கமற்ற கொடியவர் வேறு யாருமில்லை என்கிறார் திருவள்ளுவர்.
                    "நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
                      வாழ்வாரின் வன்கணார் இல்" -குரல் 276
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களையும் நாம் அடக்கி ஆள வேண்டும். அவை நம்மை ஆட்டிப் படைக்க விட்டுவிடக் கூடாது. அப்போது தான் பற்றற்று இருக்க முடியும்.
                 "ஓர் அழகான ஓவியத்தை கண்டதும் அதனை வாங்க வேண்டும்- வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்- என்று விரும்புகின்றவனை விட, அதனை வாங்க நினைக்காமல் வேடிக்கை பார்ப்பவனே மிகுதியாக அதன் அழகை சுவைக்கிறான். அதுபோல் எதனையும் நம்முடையது - நமக்காக உள்ளது என்று பற்று  வைக்காமல் உலகத்தை அனுபவிக்க வேண்டும்" என்கிறார் விவேகானந்தர்.
                   "படகு தண்ணீரில் இருக்கலாம், ஆனால் தண்ணீர் படக்குக்குள் நுழையக்கூடாது. நுழைந்தால் படகு கவிழ்ந்து விடும். அதுபோல் மனிதன் உலகத்தில் வாழலாம், ஆனால் உலகப்பற்று அவனிடத்தில் இருக்க கூடாது" என்கிறார் இராமகிருஷ்ணர்.
                   "இவ்வுலகத்தில் ஒன்றும் நிலையானது அன்று. மிகவும் நெருங்கியுள்ள ஒவ்வொரு பொருளின்றும் நாம் விடுபடுதல் வேண்டும். அப்படி விடுபடுவதே பேரின்பத்திற்கு வழியாகும்" என்கிறார் புத்தர்.
                   "தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பதில் பற்று கொண்டால், ஆன்மா ஒரு போதும் மகிழ்ச்சி அடையாது" என்கிறார் மகாவீரர்.
          
                           மனம் பற்றற்றிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நிலையாமையைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும். உடல் நிலையாமை, இளமை நிலையாமை,செல்வம் நிலையாமை ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "பிறக்கும் பொது நாம் என்ன கொண்டு வந்தோம்? இறக்கும்பொழுது நாம் என்ன கொண்டு போகிறோம்? ஒன்றுமில்லையே! அப்படி இருக்க பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் நம்மோடு வந்து சேர்ந்திருக்கும் பொருள்களின் மேல் நாம் ஏன் பற்று வைக்க வேண்டும்?.
"நம்மி கட்டி அனைத்துக் கொஞ்சுகின்ற மனைவியும் மக்களும், தச்சன் ஒருவன் மரத்தை வெட்டி சாய்ப்பது போல் காலன் உடலை கீழே சாய்த்து விட்டால், அலறி அழுது இடுகாடு மட்டும் தான் வருவார்களே அன்றி அதற்க்கு அப்பால் ஓர் அடியேனும் எடுத்து வைப்பார்களா? வைக்க மாட்டார்களே!
         "நம் உடலைவிட்டு உயிர் பிரிகின்ற வரையில் தான் எல்லாம் நம்முடன் இருக்கின்றன. சொத்தும் சுகமும் வீடுவரை தான். கண்ணீர் விட்டு அழுகின்ற மனைவியோ தெருவரையில் தான். விம்மி விம்மி அழுது புலம்புகின்ற மக்களோ இடுகாடு வரையில் தான்! அதற்குப் பின் நம் உயிரோடு வருவது நாம் செய்த புண்ணியம் பாவம் என்கிற நல்வினை தீவினை தானே!" என்றெல்லாம் பட்டினத்தார் கூறும் கருத்துக்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நினைத்துப் பார்த்தால் பற்றற்ற மனம் வந்துவிடுமே!

Thursday 25 November, 2010

அவரவர் விதி !

இமயமலை உச்சியில் புத்த மடம் ஒன்று இருந்தது. அங்கே எப்போதும் பனி படர்ந்து இருக்கும். அந்த மடத்திற்குச் செல்வதே கடின முயற்சியாக விளங்கியது. புத்த துறவிகள் இருவர் அந்த மடத்திற்குச் செல்வதற்காக மலை ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், ""காற்று வேகமாக வீசுகிறது. பனியும் மிகுதியாகக் கொட்டுகிறது. நாம் வேகமாக நடந்தால்தான் மடத்தை அடைய முடியும். இல்லையேல் வழியிலேயே சாக வேண்டியதுதான்!'' என்றார்.
இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். அவர்கள் சென்ற வழியில் முதியவர் ஒருவர் விழுந்து கிடந்தார். வலி தாங்க முடியாமல் அவர் முனகிக் கொண்டிருந்தார். இருவரும் அருகே சென்று அவரைப் பார்த்தனர்.
""மலைப் பாதையில் உருண்டு விழுந்ததால் இவர் கால் ஒன்று உடைந்துவிட்டது. இனி இவரால் நடக்க முடியாது. தாமதம் செய்தால் நம்மாலும் மடத்தை அடைய முடியாது. உடனே நாம் இங்கிருந்து புறப்படுவோம்!'' என்றார் அவர்களில் ஒருவர்.
""இந்த நிலையில் இவரை எப்படி இங்கே விட்டுச் செல்வது? நாம் இருவரும் இவரை எப்படியாவது மடத்திற்குத் தூக்கிச் செல்வோம். அங்கே உள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்வர்!'' என்றார் இன்னொருவர்.
""நாமே உயிருடன் மடத்தை அடைவோமா என்பது தெரியவில்லை. அவரவர் வினையை அவரவரே அனுபவிக்க வேண்டும். இங்கேயே சாக வேண்டும் என்பது இவர் விதி. நீர் வந்தால் வாரும்; நான் போகிறேன்!'' என்று சொன்னார் அவர். அடுத்தவரின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினார். கால் உடைந்து கிடந்தவரை அப்படியே விட்டுச் செல்ல இன்னொருவருக்கு உள்ளம் வரவில்லை. தன் உயிர் போனால் போகட்டும் என்று அவரைத் தோளில் தூக்கிக் கொண்டார். மலைப்பாதையில் ஏறத் தொடங்கினார்.
மிகுந்த எடையைத் தூக்கிச் சென்றதால் அந்தக் கடுங்குளிரிலும் அவருக்கு வியர்த்தது. துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு மலை உச்சியை நெருங்கினார். அவருக்கு முன்னே சென்ற துறவி அங்கே வழியில் இறந்துகிடந்தார். குளிர் தாங்காமல் அந்தத் துறவி விறைத்துப் போய் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரிந்தது.
அவரைப் போல இந்தக் குளிரில், தான் ஏன் இறக்கவில்லை என்று சிந்தித்தார் அவர். அந்த முதியவரைத் தூக்கி வந்ததால் அதிகமாக மூச்சு வாங்கியது. அதனால் உடல் எங்கும் கூடுதலாக ரத்தம் பாய்ந்து வெப்பம் ஏற்பட்டது. அத்துடன் அந்த முதியவரின் உடல் சூட்டால் இருவரது உடலும் சூடு கண்டது. அதனால், கடுமையான குளிர் தன்னைக் கொல்லவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. பிறருக்கு உதவி செய்வதால் நம்மையே விளையும். அந்த உதவியே தன் உயிரைக் காப்பாற்றியது என்ற உண்மை அவருக்குப் புரிந்தது

Monday 8 November, 2010

விவேகமானவராக வேண்டுமா ?

தார்மீக விஷயங்களையும், தெய்வீக, வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு பொறுமையும் இருக்க வேண்டும். "இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா...' என்று சிலர் சொல்லலாம்.
பின்னே எதுதான் வேண்டும்? எது வாழ்க்கைக்கு உதவக் கூடியது? எது அறிவை வளர்ப்பது? எது மன நிம்மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவைகளே! நிதானமாக சிந்தித்தால் தெரியும். பருத்தி பளபளப்பாக உள்ளது போல், சான்றோரின் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. பருத்தி பல கஷ்டங்களுக்கு உட்பட்டாலும், நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர்களின் குறை குற்றங்களை மறைக்க (நீக்க) பல இன்னல்களை மேற்கொள்கின்றனர். சான்றோர் நட்பு (சத் சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறிவிடும் தன்மை பெறுகின்றன. அதுபோல, காக்கை, வாத்து போல் குறைகள் உள்ளவர்களும் சான்றோரின் நட்பினால் உயர்வு பெறலாம். வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று, முனிவரானார்.  ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று, அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத் சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற்பட்டது. சத் சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல்வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும்.  சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல் சித்திகள் ஏற்படாது.
சாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண்பன்-பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர். சான்றோர் தூய உள்ளம் கொண்டவர்கள், உலக நன்மை யை நாடுபவர்கள், உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள்; உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர். நாமெல்லாம் எப்படியோ? சான்றோர் வரிசையில் சேர முடியுமா?                                       

Thursday 4 November, 2010

தீபாவளி அன்று...

  • ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்தி திரும்பினார்.
  • மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார்.
  • நரகாசூரனை மகாவிஷ்ணு வதம் செய்தார்.
  • மகாபலி மன்னன் அரியணை ஏறினான்.
  • மகாவீரர் முக்தி அடைந்தார்.
  • விக்கிரமாதித்யன் முடிசூடிக் கொண்டான்.
  • மாவீரன் சிவாஜி, தனது எதிரிகளை வென்று கோட்டைக்குள் விளக்கு ஏற்றினார்.
  • கோதார விரதம் மேற்கொண்டு சக்திதேவி சிவா பெருமானின் உடலில் பாதி பெற்றார்.
  • சுவாமி ராமதீர்த்தர் தீபாவளி அன்று பிறந்து, தீபாவளி அன்று சந்நியாசம் பெற்று, ஒரு தீபாவளி அன்றே சமாதி அடைந்தார்.
  • ஆதிசங்கரர் ஞானபீடங்களை ஸ்தாபித்தார்.
  • சீக்கிய மதகுருவான குருநானக் முக்தி அடைந்தார்.
  • குபேரன் சிவபெருமானை வழிபட்டு பல பொக்கிஷங்களைப் பெற்றார்.
  • காளிதேவி 64 ஆயிரம் யோகினிகள் புடைசூழ காட்சி தந்தாள். 

நல்ல எண்ணங்கள் என்ற தீப விளக்கை ஏற்றி வைத்து, இருள் என்ற தீமையை அழிப்பதே தீபாவளி.

இறைவனுக்கே மகனாக இருந்தாலும் சில நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தான் இயங்க வேண்டும். தந்தை உயர் பதிவியில் இருந்தாலும், அவரது மகன் தவறு செய்ய அனுமதிக்க முடியாது.

தாய், தனது மகனை எவ்வளவு கண்டிப்புடனும், கண்காணிப்புடனும் வளர்த்தாலும் அவனிச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருகிறார்களோ அப்படியே அவனது குணங்களும் மாறுகின்றன.

இறப்பு என்பது தவிர்க்க இயலாதது. ஒருவன் வாழும் காலத்தில் பிறருக்குப் பயன்படும் படியாக வாழ வேண்டும். அந்தவகையில் ஒருவன் வாழக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நரகாசூரன்.

தாய், தந்தையராக இருந்தாலும் அறம் எதுவோ, உலக நன்மைக்கு எது உகந்ததோ, அதையே என்றும் பாராமல் கிருஷ்ணரும், சத்தியபாமாவும் செய்தனர்.

செய்தது தவறு என்று தெரிந்ததும், அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோருவது உயர்ந்த பண்பு.

செய்த தவுறுக்காக வருந்துவதும், அதை ஒத்துக் கொள்வதும் நாம் முன்னேற்றம் அடைய உதவும்.

-நரகாசூரன் கதை தவிர, கதைகள் பல இருந்தாலும், அவற்றின் மையக் கருத்து தீமை வெல்லப்படும் என்பதாகவே இருக்கிறது.

அகங்காரம், பொறாமை, தலைக்கனம் இவற்றை நம்மிடமிருந்து அகற்ற வேண்டும் என்பதையே தீபாவளி வலியுறுத்துகிறது.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Thursday 28 October, 2010

பூஜையின் போது மணி அடிப்பது ஏன் ?

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி  அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.  ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம்.  கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை. இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.
மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும்.  கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர்.  இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்று சொல்வர்.

Friday 22 October, 2010

குலத்துக்கும், குணத்துக்கும் சம்பந்தம் உண்டா?

ஒருவனுடைய நன்னடத்தை, நல்ல சுபாவம் இவைகளைக் கொண்டே அவன் நல்ல குலத்திலும், நல்ல குடும்பத்திலும் பிறந்தவன் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். "அவரை போட்டால், துவரை முளைக்குமா?" என்பர்.
                            ஒரு குருட்டு பிச்சைகாரனை ராஜாவின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் சேவகர்கள். பிச்சை எடுப்பது குற்றம் என்பது அங்கே சட்டம். அவனை விசாரித்த ராஜா, உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டான். 'எனக்கு மாணிக்ககல்லை பரிசோதிக்கத் தெரியும்; குதிரைகளை பரிசோதித்து  நல்ல ஜாதிக் குதிரை தானா என்று சொல்ல முடியும்; மனிதர்களின் தன்மையை அறிந்து, அவர்கள் நல்ல குலத்தை சேர்ந்தவர்களா என்பதையும் சொல்லமுடியும்!" என்றான் பிச்சைக்காரன்.
                              'சரி! இவனுக்கு தினமும் ஒரு பட்டை சோறு கொடுத்து, சிறையில் வையுங்கள்!' என்று உத்தரவிட்டான் ராஜா. ஒரு நாள் மாணிக்ககல் கொண்டு வந்தான் இரத்தின வியாபாரி ஒருவன். அந்தக் குருடனை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. தன் காதுகளில் கல்லை வைத்துப் பார்த்து விட்டு, "இது மாணிக்ககல் அல்ல! இது ஒரு பூச்சிக் கூடு !" என்றான் குருடன். வியாபாரி போனபின் இதை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டான் ராஜா." மாணிக்கல்லானால் காதில் வைத்தால் ஓசை எதுவும் வராது; பூச்சிக் கூடானதால் காதில் வைத்ததும் 'ஞொய்' என்ற சப்தம் வந்தது, அதனால் கண்டுபிடித்தேன்... என்றான் குருடன். 'சபாஷ்! தினமும் இவனுக்கு இரண்டு பட்டை சோறு கொடு..' என்று உத்தரவிட்டான் ராஜா.
                             மற்றொரு நாள், ஒரு அழகிய குதிரையை கொண்டு வந்தான் குதிரை வியாபாரி ஒருவன். குருடனை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. குதிரையின் முதுகில் கைவைத்த குருடன், 'இது அசல் ஜாதிக் குதிரை அல்ல......' என்றான். இதை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டான் ராஜா.ஜாதிக் குதிரையானால், முதுகில் கைவைத்ததும் உடலை சிலிர்க்கும். இது சொரணையே இல்லாமலிருந்தது. அதனால் கண்டுபிடித்தேன்!' என்றான். சபாஷ்! தினமும் இவனுக்கு மூன்று  பட்டை சோறுகொடுங்கள்! என்றான் ராஜா. பிறகு ஒரு நாள், குருடனிடம், தான் எப்படிப் பட்டவன் என்பதை சொல்லும்படிக் கேட்டான் ராஜா. 'மகாராஜா நான் சொல்வேன்! ஆனால்..நீங்கள் கோபப்படக்கூடாது...' என்றான் குருடன். ராஜாவும் சரி என்றான்.மகாராஜா நீங்கள் ஒரு சமையல் காரருக்கு பிறந்தவர்; ராஜாவுக்குப் பிறக்கவில்லை. கோபிக்ககூடாது!" என்றான் பயந்து கொண்டே. நேராக தன் தாயிடம் போய் விசாரித்தான் ராஜா. அரண்மனை சமையல்காரனுக்கு இவன் பிறந்ததாக தெரிந்து கொண்டான்.
                                                     குருடனிடம் வந்து 'உண்மை தான்! இதை நீ எப்படி தெரிந்து கொண்டாய்?' என்று கேட்டான் ராஜா. ஒ அதுவா! ராஜாவுக்குப் பிறந்து, ராஜவம்சத்தில் பிறந்தவன், பிறரைப் புகழ்ந்து பரிசளிப்பதானால், பொன்னைக் கொடு, பொருளைக் கொடு என்பான்; நீங்கள் எப்போது பார்த்தாலும்,
ஒரு பட்டை சோறு,இரண்டு பட்டை சோறு,மூன்று பட்டை சோறு' என்று பட்டை சோறாகவே பரிசளித்தீர்கள். சமையல்காரனுக்குத் தான் பட்டை சோறு ஞாபகம் வரும்; அதனால், நீங்கள் சமையல்காரன் மகனாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன்!' என்றான். ராஜாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குருடனுக்கு வெளியூரில் வசதியாக வாழ, வழி செய்து அனுப்பி வைத்தான்.
                                                 குலத்தையும், குடும்பத்தையும்  பொருத்துத் தான் பிள்ளைகளும் இருப்பர்' என்பதைச் சொல்ல இப்படி ஒரு கதை உண்டு.ஒரு சில விதி விலக்கும் இருக்கலாம். அனுபவத்தில் கானவேண்டியவை இவை! பக்தியும், ஆசாரமும் உள்ள குடும்பத்தில் அதற்கேற்ற பிள்ளை!. தன்னுடைய ஊழ்வினைக்கேர்ப்பவே பிள்ளைகளும் அமையும்.

Saturday 9 October, 2010

ஆகாரத்தை குறையுங்கள். பகவானை நினையுங்கள்!


இந்தக் கலியுகத்தில், உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். மனிதனாகப் பிறந்தவன் குறிப்பிட்டகாலம் வரை வாழ்கிறான். அந்தக் காலத்தில் அவன் நற்காரியங்களையும், தெய்வ வழிபாட்டையும் சிரத்தையுடன்  செய்து, சில தர்மங்களை அனுஷ்டித்து வந்தால் அதுவே மோட்ச சாதனம்.
அந்தக் காலத்தில் முனிவர்கள் காற்றையே புசித்து தவம் செய்தனர். அதன் பின்னர், சிலர் தயிர், தண்ணீர் இவைகளைப் புசித்தனர். பின்னர், காய், கிழங்கு, பழம் இவைகளைப் புசித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு வந்தவர்கள், தானியங்கள், இலை, காய், பழம் இவைகளை புசித்தனர். அதன் பிறகு வந்தவர்கள், தானியங்களை வேக வைத்தும், சில தானியங்களை மாவாக்கியும், காய், கிழங்கு, இலை இவைகளையே வேக வைத்து, புசித்து நல்ல காரியங்களில் ஈடுபட்டனர். இவர்களெல்லாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆகாரத்தை அளவோடு உண்டு, பல காலம் திடமாக வாழ்ந்தவர்கள்.
                                  காலப்போக்கில், நாகரீகம் வளர, வளர ஆகாரத்தின் வகைகளும், ருசியின் ஆசையும் அதிகமாயிற்று. ஒரு நாளைக்கு ஒரு வேளை என்றிருந்து போய், ஒரு நாளைக்கு இரண்டாகி, மூன்றாகி, நாலு, ஐந்து, ஆறு என்றாகியது. நம் பெரியோரும், யோகிகளும் உலகநன்மையை உத்தேசித்து  உயிர் வாழ்வதற்காக சாபிட்டனர். இப்போது ஒரு சிலரைத் தவிர, எல்லாருமே சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ நினைகின்றனர்.
                 
அந்தக் காலத்தில் நல்ல காரியம் செய்வதையே குறிகோளாக கொள்வர்; பசி, தாகம் எதையும் கவனிக்க மாட்டார்கள்.இப்போதெல்லாம் பசி தாங்கார், சதா சாப்பிட வேண்டும், இரவெல்லாம் கண்விழித்து, சினிமா, நாடகம், சூதாட்டம் இப்படிபட்டவைகளில் ஈடுபட்டு தீவினைகளை உண்டாக்கும் செயல்களிலேயே கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.
                                பகவத் பக்தியிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டால் ஆன்ம விடுதலைக்கு வழி பிறக்கும்.  கேளிக்கைகளிலும், சரீர சுகத்திலும் ஈடுபட்டால் விடுதலை எப்படி கிடைக்கும்?......... ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது,' என்ன சார்! சாப்டாச்சா? ' என்று கேட்டதும், அவர், ' ஒ! இப்பதான் ஆச்சு!' என்று சொல்வார். ' என்ன சார்! இன்னைக்கு கோவிலுக்குப் போயிருந்தீர்களா, ஜெபம் ஆயிற்றா?" என்று யாரும் விசாரிப்பதில்லை. அப்படிச் செய்ததாக யாரும் சொல்லுவதுமில்லை. இந்த சரீரமும், வாழ்கையும் சப்பாடுக்காகவே ஏற்பட்டதாக நினைகின்றனரோ! என்று தோன்றுகிறது.
                                      
                                                  நாயன்மார்களும், ஆழ்வார்களும், மகான்களும், பகவானைத் துதித்து,' பகவானே! உன்னை நினையாத  நாட்களும், உன்னை துதிக்காத நாட்களுமே நான் பட்டினி கிடந்த நாட்களாகும்...' என்று உள்ளமுருகி பேசுகின்றனர். சாப்பாட்டை விட, இறைவனின்  நினைப்பும், அவனது சேவையுமே உயர்ந்ததென்று கருதினர்; முக்தியும் பெற்றனர்.
ஆகாரத்தை குறையுங்கள். பகவானை நினையுங்கள். நிம்மதி கிடைக்கும். 'முக்திக்கும் வழி பிறக்கும்'.

Wednesday 6 October, 2010

மஹாளய அமாவாசை

Tuesday 5 October, 2010

பசித்தவர்க்கு உணவளியுங்கள்

* கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார். தனிப்பெருங்கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.
* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்
களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.
* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம்
தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும்
கடைபிடிக்க வேண்டும்.
* ஏழைகளின் பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். இந்த ஒழுக்கம் ஒன்றே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த வயிறுக்கு உணவளித்தவன் பெரும்
புண்ணியத்தை அடைவான். நோய்நொடிகள் அவனை விட்டு விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
* எதற்காகவும் கோபம் கொள்வதோ, பொய் சொல்வதோ, பிறர் நலன் கண்டு பொறாமை கொள்வதோ கூடாது.
உரத்துப்பேசுவது, விவாதம் செய்வது, வழக்கிடுவது, பிறரிடம் சண்டையிடுவது கூடாது.
* பதட்டம் கொள்வதால் பிராணவாயு அதிகமாகச்
செலவாகும். எனவே, எச்செயலையும் நிதானத்துடன் அணுகுவதே சிறந்தது.
வள்ளலார்
(இன்று வள்ளலார் அவதரித்த தினம்)

Tuesday 28 September, 2010

தனிமை!

மனித வாழ்க்கையில் கடமை என்று சொல்லப் படும் பல காரியங்களும், பொழுதுபோக்கு காரியங்களும் அடங்கும். பொழுது போக்காக செய்யும் காரியங்களால் பயன் ஏதுமிராது. கடமைக்காக செய்யும் காரியங்களில், குடும்பம், பந்துக்கள், நண்பர்கள் இவர்களுடைய மேம்பாட்டுக்காக செய்யப் படும் காரியங்கள் ஒரு வகை; தன்னுடைய மேம்பாட்டுக்காக செய்யும் காரியங்கள் மற்றொரு வகை.

இதிலும் தான் பெயரோடும், புகழோடும் வாழ வேண்டும், உன்னத நிலையிலிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படும் காரியங்கள் ஒரு வகை; தெய்வ சிந்தனை, வழிபாடு, பக்தி போன்றவற்றின் மூலமாக பிறவிப் பிணியை போக்குவதற்கான மார்க்கங்களில் ஈடுபட்டு, ஞானம் பெற்று, ஜென்மா கடைதேறுவதற்கு வேண்டிய காரியங்களை செய்வது இன்னொரு வகை. ஆனால், வாழ்க்கையில் மனிதன் கடைத்தேறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் அதாவது, எதைச் செய்தால் இந்தப் பிறவி பிணியை போக்கலாமோ அதைத் தள்ளிப் போடுகிறான்; அதை செய்யாமலே போய் விடுகிறான். 
ஆக, இந்த ஜென்மம் எடுத்ததற்கு என்ன பயன் என்றால், யார், யாருக்காகவோ பாடுபட்டு சம்பாதித்து விட்டு போய் விடுகிறான். இப்படி எத்தனை ஜென்மாவில் செய்து கொண்டிருப்பது...... விடிவு தான் எப்போது?
                                      கடமையையும் செய்ய வேண்டும்; தான் உய்யும் வழியையும் தேட வேண்டும். இதற்கு, ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின், உடலில் சக்தி இருக்கும் போதே, பகவானை அடையும் வழியைத் தெரிந்து, அதன் வழி நடக்க வேண்டும். குடும்ப பந்தத்தில் தாமரை இலைத் தண்ணீர் போல பற்றும், படாமலும் இருக்க வேண்டும். இதற்கு சில வழிமுறைகளை சொல்லி இருகின்றனர். சித்த சுத்தியோடு, மனதை ஒருமுகப்படுத்தி, ஏகாந்தத்தில் அமர்ந்து , பகவானை நினைத்து, மந்திரங்களால் ஜெபித்து, அவனருள் பெற வேண்டும். இதில் ஏகாந்தம் என்பது ஒரு முக்கிய அம்சம். கடவுளைக் குறித்து தியானம் செய்வதற்கு, இடையூறுகள் இல்லாத தனியிடம் மிக அவசியம். இப்படி தனிமை ஏறப்பட்ட பிறகு தான் மனதை ஒருமுகப்படுத்துதல், புலனை அடக்குதல்,இதெல்லாம் சாத்தியமாகும்.

                                                            பகவானை வழிபட தபஸ் செய்வதற்காக காட்டுக்கு சென்றான் துருவன். அவனை சந்தித்தார் நாரதர். ' எங்கே போகிறாய்? எதற்காக போகிறாய்?' என்று கேட்டு விட்டு,' தபஸ் ரொம்ப சிரமமாயிற்றே, இதெல்லாம் உன்னால் முடியாது; வீட்டுக்கு போ!...' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், ' தவம் செய்து பகவானை தரிசிக்கப் போகிறேன்!..' என்று பிடிவாதமாக சொன்னான் துருவன்.   துருவன் தனிமையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, நாராயணின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கவேண்டுமென்று சொல்லி, மூல மந்திரத்தையும் அவனுக்கு உபதேசித்தார், நாரதர். 'இனி, நீ, தவம் செய்ய ஆரம்பிக்கலாமே! .... என்றார் நாரதர்.

                                                              'அது சரி... நான் ஆரம்பிக்கிறேன், அதற்கு முன் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போங்கள்!" என்றான் துருவன். 'ஏன், நான் இருந்தால் என்ன?' என்று கேட்டார் நாரதர். 'தவத்தை தனிமையில் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் தானே உபதேசிதீர்கள். நீங்கள் இங்கு இருந்தால் எனக்கு தனிமை எப்படி ஏற்படும். என் மனமும், நீங்கள் என்ன செய்கரீர்கள் என்று  என்பதை கவனிப்பதில் தானே இருக்கும். ஆகவே, தயவு செய்து தாங்கள் இந்த இடத்தை விட்டு நகருங்கள்! ' என்றான் துருவன்.நாரதருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவனாக இருந்தாலும், விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ந்து அவனை ஆசிர்வதித்து சென்று விட்டார்.
                                                        தியானம், தவம் இவைகளுக்கு முக்கியமானவை தனிமை! இடம் கிடைப்பது தான் சிரமமாக இருக்கிறது.

Monday 27 September, 2010

துஷ்டனைக் கண்டால் தூர விலகு

குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்தப் பக்கமாக தேரில் வந்தான். தர்மர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் தெருவில் நடக்க வேண்டும்? இதுபற்றி அவன் தர்மரிடமே கேட்டு விட்டான். ""அண்ணா! நம்மைப் போன்றவர்கள் தெருவில் நடக்கலாமா? நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் தந்தும் நீ நடந்து செல்கிறாயே! இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ?'' என்றான்.தர்மர் அவனிடம்,""தம்பி! நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை  தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு தெருவாக நடந்தால் தான், நமது நாட்டின் நிலைமை, மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்,'' என்றதும், துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது.""நாடாளப் போவது நானல்லவா! அப்படிப் பார்த்தால் நானல்லவா நடந்து செல்ல வேண்டும், இவன் ஏன் நடக்கிறான்? சரி...சரி...இவனைப் போலவே நாமும் நடப்போம்,'' என தேரில் இருந்து குதித்தான்.மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும், அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம், இவனும் கவனித்துப் பார்த்தான்.ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன், ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். தர்மருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.""சே...இவனெல்லாம் ஒரு மனிதனா! இவனது காலில் ஒரு முள் குத்தினால் "ஆ'வென அலறுகிறான். ஆனால், இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு
கரகரவென நறுக்குகிறான். ஐயோ! அதன் அவலக்குரல் இவனது காதுகளில் விழத்தானே செய்கிறது! இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா?' ' என்று அவனை மனதுக்குள் திட்டியபடியே நடந்தார்.
அப்போது, அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன.
""ஐயோ! தவறு செய்துவிட்டோமே! இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும், மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும், நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு, தர்மத்தையும் பாதுகாக்கிறான்.  அப்படியானால், இவனைப் பற்றிய தப்பான அபிப்ராயம் என் மனதில் ஏன் ஏற்பட்டது? நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே!'' என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.நிஜத்தில் நடந்தது என்ன தெரியுமா?இவர் தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால், துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட குணம் காற்றில் பரவி, தர்மரையும் பாதித்து விட்டது. இதனால் தான் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்றார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ...அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுமாம்! அதனால் தான் அப்படி ஒரு பழமொழியே வந்தது. இனியேனும், நல்லவர்களுடன் மட்டும் சேர்க்கை வைத்துக் கொள்வீர்கள் தானே!

Friday 24 September, 2010

கடவுளும் விதிவிலக்கல்ல ! - ஆன்மிக கதை

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரது முதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். தேவலோகத்திலும் இப்படி நடப்பதுண்டு. தம்பதிகளை சிவபார்வதி கைலாயத்துக்கு  அழைத்தனர். பூமாதேவி வர மறுத்துவிட்டாள்.
 ""அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் "அசலா'.  அதாவது, இருந்த இடத்தை விட்டு நகராதவள் என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். நீங்கள் திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள்? அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா? நீங்கள் மட்டும் போய் வாருங்கள்,'' என்று அனுப்பி விட்டாள்.
பெருமாளுக்கு வருத்தம். மேலும், போகும் இடங்களில் பெருமாளைப் பார்ப்பவர்கள் எல்லாம், ""ஆத்துக்காரி வரலையா?'' என்று கேட்பார்கள். பெருமாளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கடப்பட்டார். இந்த பூமாதேவி அசையவே மாட்டாள். எனவே, இரண்டாம் திருமணம் செய்வோமே என்று சமுத்திரராஜன் பெண்ணான லட்சுமியை மணந்து கொண்டார்.
அவளோ வீட்டிலேயே இருக்கமாட்டாள். ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால், மறுநாள் இன்னொரு வீட்டுக்குப் போய்விடுவாள். செல்வத்தின் அதிபதியல்லவா! நிலையில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். பெருமாள் அவளை அழைக்கச் செல்லும் நேரம், "எங்காவது போயிருக்கிறாள்' என்றே பதில் கிடைக்கும்.
அவளோ அசைய மறுக்கிறாள், இவளே ஓடிக்கொண்டே இருக்கிறாள். பெருமாள் லட்சுமியுடன் சேர்ந்து ஓடினார். ஆனால், அவள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டார்.
பிறகு தன் மகன் மன்மதன் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கலாம் என்று சென்றார். செல்லும் வழியில் ஒரு முனிவர் பார்த்தார். ""உமது மகன் செய்த வேலையைப் பார்த்தீரா! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டிருக்கிறான். அவர் கோபத்தில் நெற்றிக்கண்ணைத்
திறந்திருக்கிறார். பஸ்பமாகி விட்டான்,'' என்று சொன்னதும், மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் அவர். மீண்டும் பாற்கடல் வந்த அவர், ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்தார். அவனோ விஷக்காற்றை வெளியிட்டபடியே இருந்தான். சற்று வெளியே போய்வரலாம் என கருடன் மீது ஏறி அமர்ந்தார். பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது, பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த கருடன், ""சுவாமி! இதோ! என் உணவான பாம்பு செல்கிறது. அதைப் பிடிக்கப் போகிறேன்,'' என நுடுவழியில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டான். தன்னைக் கவனிக்க யாருமே இல்லாததால், பகவான் ஒரு கட்டையாக தன்னை மாற்றிக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில், பெருமாள் கம்பு வடிவில் இருக்கிறார். பார்த்தீர்களா! அனுபவிக்க வேண்டுமென்ற விதியிருந்தால், யாராக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் துன்பம் வந்தால் கலங்காதீர்கள். அதையும் ரசித்து அனுபவிக்கும் பக்குவ நிலையைப் பெறுங்கள்.

Friday 17 September, 2010

எது உண்மையான சுகம்?

மனித வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான் என்பது தெரியும். இந்த வாழ்நாளை பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். அதற்கு தகுந்த படி வாழ்க்கையை  அமைத்துக் கொள்ள வேண்டும்.
                                எது பயனுள்ளது, எது பயனற்றது என்பதை பெரியோர் கூறியிருகின்றனர். தனக்கு தேவையானதை தார்மீக முறையில் சம்பாதிக்க வேண்டும். குடும்ப தேவை, தெய்வீக காரியங்கள், சொந்த பந்தங்களுக்கு உதவி செய்தல், ஓரளவு தான, தர்மம் செய்தல், போதுமே என்கிற திருப்தி....இப்படி வாழ்க்கை நடத்தினால் இகத்துக்கும் சுகம், பரத்துக்கும் சுகம் என்றனர். இப்படி இருக்க முடியா என்பது தான் பிரச்னை.
                           முதலாவதாக 'இது போதும்!..., என்ற எண்ணம் வருகிறதா? பணம், பொருள் என்று வரும் போது, ' இது போதும்... இனி வேண்டாம்....'   என்ற பேச்சே இருப்பதில்லை. வேலைக்குப் போனால் சம்பளம் போதாது. வாடகை வீடென்றால், சொந்தவீடிற்கு ஆசை; சொந்த வீடு இருந்தால், இன்னும் கொஞ்சம் பெரிய வீடு மேல் ஆசை; பெரிய வீடாக இருந்தால், மாடி வீடாக இருந்தால் வாடகைக்கு விடலாமே என்ற ஆசை.
                                  சைக்கிள் மேல் ஆசை. பிறகு ஸ்கூட்டர், கார் இப்படி ஒவோவேன்றாக ஒவ்வொவென்றாக ஆசை! இதற்கு வரம்பே கிடையாது. ' ஆமாம் சார்....ஏதோ இருக்கறதை வெச்சுக்குட்டு இதுவே போதும்னு உட்கார்ந்திருந்தால் அது என்ன வாழ்க்கை.. சார். இந்த வாழ்நாளில் நாலு பேரைப் போல் நாமும் நிறைய சம்பாதித்து, நன்றாக அனுபவிக்க வேண்டாமா... அப்படி ஆசை இராதா?' என்று கேட்கின்றனர். ஆனால், வாழ்கையில் எது சுகம், நிம்மதிஎன்பதை கொஞ்சம்  சிந்தித்துப் பார்த்தால் புரியும். நிறைய பணம் இருந்தாலும் திருடர் பயம், வருமான வரி பயம்; கடன் கொடுத்திருந்தாலும் வருமோ, வராதோ என்ற பயம்; இதுவும் தவிர, யாரவது சொந்தங்கள் உதவி கேட்டு வந்து விடுவாரோ என்ற பயம்.
                                             பின்னே சேர்த்து வைத்ததை என்ன தான் செய்வது? என்ன செய்தால் திருப்தி, நிம்மதி ஏற்படும்? ஓரளவு பொருள் சேர்க்க வேண்டியது. குடும்பத்தை ஒழுங்காக நடத்தி, அதற்காக செலவிடுவது, பிறருக்கு உதவுவது, தன இகலோக சுகத்துக்கு செலவிடுவதைப் போல, பரலோக சுகத்துக்கும் ஏதாவது செய்து கொள்வது நன்மை தரும் என்றனர்.பரலோக சுகத்துக்கும் என்ன செய்ய வேண்டும்? தான, தர்மம் தான் வழி!
பெரியோர் சொன்னதையும் கேட்டு, புராணங்களில் சொல்லி இருப்பதையும்  நம்பித் தான், தனக்கான தான, தர்மங்களுக்கு பணத்தை செலவழிக்க வேண்டும்.
                      இதற்கு மனசு வராமல் போனால், உறவினர்கள் போன்றவர்களால் அந்தப் பணம் அழியத் தான் போகிறது. ஆளுக்கு கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் அங்கே என்ன இருக்கும். சண்டை, சச்சரவு, மனஸ்தாபம் இருக்கும். இதற்காகவா இதனை பாடு பட்டு சேர்த்து வைத்தது!......
கடமைக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் போதும். பரலோகத்துக்கு வேண்டியதை செய்து கொள்ளலாம். மறக்கக் கூடாது, இப்படி வாழலாமே!..என்றனர் மகான்கள். நமக்கு அது புரிய வேண்டுமே!

Thursday 9 September, 2010

அகம் பாவம், தற்பெருமை கூடாது!

பூர்வ ஜென்மத்தில் செய்த நன்மை தீமைகளை பொறுத்து, தன் வாழ்நாளில் சில நல்ல காரியங்களை செய்து பெயரும், புகழும் பெறுகிறான் மனிதன். ஒருவன் எவ்வளவோ தான, தர்மங்களை செய்யலாம் ; பரோபகாரியாக இருக்கலாம்.இதெல்லாம் அவனுக்கு புண்ணியத்தைச் சேர்க்கும். ஆனால், தான் செய்துள்ள தான, தர்மங்களைப் பற்றி பிறரிடம் தானே, பெருமையாகப் பேசிக் கொண்டு, தற்புகழ்ச்சி செய்து கொள்வது, அவன் செய்துள்ள தான, தர்மத்தின் பலனை கெடுத்து விடும்.
யயாதி என்ற சக்கரவர்த்தி, பூலோகத்திலும், தேவலோகத்திலும் புகழ் பெற்றவன்; பல யாகங்களை செய்தவன்; சாதுக்களை ஆதரித்தவன். கடைசிக் காலத்தில் ராஜ்யத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்து விட்டு, தவம் செய்து முக்தி பெற்றான். தேவலோகத்தில் இந்திரனாலும், தேவர்களாலும் கவுரவிக்கப் பட்டான்.ஒரு தேவ விமானத்தை யயாதிக்கு அளித்து, "உன் இஷ்டம் போல் எந்த புன்னியலோகதுக்கும் இதன் மூலம் செல்லலாம். தேவலோக இன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்..' என்றான் தேவேந்திரன்.
                                                                                         யயாதியும் அந்த விமானத்தில் ஏறி,எல்லா புன்னியலோகங்களுக்கும் சென்று, எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்ச்சியோடு இருந்தான். எல்லா புன்னியசாலிகளுக்கும் மேம்பட்டவன் தான் தான்' என எண்ணிக் கொண்டான். யயாதியிடம் அகம்பாவம் ஏற்பட்டிருப்பதை அறிந்த தேவேந்திரன்,' ஒ யயாதியே... நீ எல்லா கர்மங்களை குறைவின்றி பூர்த்தி செய்து , இல்லறத்தை துறந்து, தவம் செய்து புன்னியலோகங்களை ஜெயித்தாய். "தவத்தில் நீ யாருக்கு ஒப்பானவன்?" என்று கேட்டான்.யயாதிக்கு தற்பெருமை தலை தூக்கியது.
                                                                                         'இந்திரனே, தேவர்களிலும், மனிதர்களிலும், கந்தவர்களிலும், ரிஷிகளிலும் தவத்தில் எனக்கு ஒப்பானவர்கள் யாருமே கிடையாது'....என்றான். உடனே இந்திரன் ,'' ராஜனே.. சமமானவர்களையும், மேலானவர்களையும், அவர்களின் மகிமையை அறியாமலே நீ அவமதித்துப் பேசி விட்டாய், உன் அகம் பாவம் உன் புண்ணியத்தை அழித்து விட்டது.... நீ இப்போதே கீழே தள்ளப் பட்டு விழுவாய்..." என்றான். தன் தவற்றை உணர்ந்த யயாதி, தண்டனையை ஏற்கத் தயாரானான். இந்திரனைப் பார்த்து,' நான் அகம்பாவத்தால், அவர்களை நான் அவமதித்தால் எனக்கு புன்னியலோகங்கள் நஷ்டமாகிறது. நான் தேவலோகத்தை விட்டு கீழே விழும் போது, 'சாதுக்களின் நடுவே விழும்படியாக செய்வாயாக..' என்று வேண்டிக் கொண்டான்.
                                                                                         அதேபோல், பூலோகத்தில் கங்கை நதி தீர்த்தத்தில் சாதுக்கள் யாகம் செய்து கொண்டிருந்த இடத்தில விழுந்து, சாதுக்களின் தரிசனம் பெற்றான் யயாதி. அவனது பெண் மகா தபஸ்வி. அவள் தன புண்ணியம் அனைத்தும் யயாதிக்கு அளித்தாள். அதன் பலனாக மீம்டும் தேவவிமானத்தில் புன்னியலோகம் சென்றான் யயாதி. நல்ல காரியங்களை செய். புண்ணியம் சம்பாதித்துக் கொள். புன்னியலோகங்களை ஜெயித்துக்கொள். அனால், தற்பெருமையும், அகம்பாவமும் வேண்டாம். இவைகளை விட்டு விட்டால், ஒருவன் எல்லா நற்பலன்களையும் பெறலாம்.

Saturday 4 September, 2010

கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!

ஒரு கிராமத்துக்கு ஒரு பரதேசி வந்தார். அவர் வீடு வீடாகப் போய் பிச்சை கேட்பார்.
ஒருநாள் ஒரு வீட்டின் பெண்மணி, ஏம்ப்பா...உனக்கு கை காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு. உழைச்சு சாப்பிட்டா என்னவாம்? என்று கடுமையாகப் பேசி விட்டாள். பரதேசிக்கு வருத்தம். அவருக்கு ரோஷம் வந்து விட்டது. தன்னைத் திட்டிய அந்த ஊரார் முன், தான் ஒரு கடும் உழைப்பாளி என்பதைக் காட்ட ஒரு காலியிடத்தில் பூந்தோட்டம் போட்டார். கோயில்கள் மிகுந்த அந்த ஊரில் பூக்களை விற்று சம்பாதிக்கலாம் என கணக்கு போட்டார். ஆங்காங்கே கிடந்த பூங்குச்சிகளை ஒடித்து குழி தோண்டி நட்டார். அருகிலேயே ஒரு கால்வாய் ஓடியது. அதில் இருந்து தண்ணீர் எடுத்து, செடிகளில் ஊற்ற குடம் இல்லை.
                              ஒரு குயவனிடம் சென்று, எனக்கு இலவசமாக ஒரு குடம் தா. என் தோட்டத்து பூக்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நான் பரதேசி. காசு இல்லை, என்றார். இவர் பரதேசி என்றால், அவன் வடிகட்டிய கஞ்சன். இருந்தாலும் இல்லை என சொல்லாமல் அப்போதைக்கு தட்டிக் கழிப்பதற்காக, நாளை வாரும், குடம் தருகிறேன், என சொல்லி அனுப்பிவிட்டான். அவர் அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக அங்கு போய் நின்றார். அன்றும் நாளை வாரும், குடம் தயாராகவில்லை, என சொல்லி அனுப்பி விட்டான். மறுநாளும் போனார். இப்படியே பலநாள் போனார்.

பத்து மாதங்களாக தொடர்ந்து ஒரே பதிலே கிடைத்தது. அதுவரை தென்னை மட்டையில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றியும், கொட்டாங்கச்சிகளில் தண்ணீர் எடுத்தும், தன் மேல் துண்டை தண்ணீரில் நனைத்து அதைக் கொண்டு வந்து பிழிந்தும் செடிகளை ஓரளவு காப்பாற்றி வைத்திருந்தார் பரதேசி. ஒருநாள் பரதேசியின் தொல்லை தாங்காமல் ஒரு மண்குடத்தை கொடுத்துவிட்டான். பரதேசிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தன் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார். தற்செயலாக கை நழுவ குடம் கீழே விழுந்து உடைந்தது. வருத்தத்துடன் தோட்டத்துக்கு திரும்பிய பரதேசி ஒரு சித்தரைப் பார்த்தார். நடந்ததைச் சொன்னார். சித்தர் அவரிடம், ஒவ்வொரு மனிதனும் பத்துமாதம் தாயின் கருவில் இருந்து, பிறக்கும் போது பரதேசியாக ஆடை கூட இல்லாமல் தான் வருகிறான்.  இங்கே வந்ததும் பாட்டு, கூத்து, செல்வம், ஆடை, அணிகலன் என்ற மாயைக்குள் சிக்கி, ஆடாத ஆட்டம் ஆடுகிறான். உயிர் பிரிந்ததும், நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த குடத்தை கீழே போட்டு உடைத்தது போல, எல்லாவற்றையும் இழந்து, அதே நிர்வாணத்துடன் வந்த இடம் திரும்புகிறான், என்றார். பரதேசி வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து கொண்டு, மீண்டும் ஆசைகளைத் துறந்து தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.

Tuesday 31 August, 2010

ஆன்மீக சாதனை



படிப்பதும், பணம் சம்பாதிப்பதும், பதவிக்கு செல்வதும், வீடு கட்டுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே. புற வாழ்க்கை வசதிகளை பெறுவதற்காக பணம் சம்பாதிக்கும் வழிகளை தெரிந்து கொள்கிறோம். ஆனால், நம்மை பற்றி நாம் தெரிந்து கொள்வது இல்லை. நம்மை பற்றி நமக்கே தெரிவதில்லை.
                          ஆன்மிகம் பேசும் பலருக்கு ஆன்மீகத்துக்கான அர்த்தம் தெரிவதில்லை. ஆன்மிகம் என்றால் ஆன்மா, என்னை பற்றி, நான் யார், என் லட்சணம் என்ன? என அறிவதே ஆன்மிகம். அதற்கான கல்வியே ஆன்மீக கல்வி.எத்தனை வசதி, வாய்ப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சி என்பது வந்து விடுவது இல்லை. மகிழ்ச்சி, இன்பம்,பேரின்பம் என்ற மூன்று நிலைகளில் வாழ்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்வதே ஆன்மீக சாதனையாக கருதப்படும்.
                                              மகிழ்ச்சியாக வாழ உடல் நல, ஆரோக்கியம் மிக முக்கியம். ஆன்மீக சாதனையில் முதலிடத்தில் இருப்பது உடல் நலம். பல பேருக்கு உடம்பின் மதிப்பு தெரிவதில்லை. கடவுளின் அற்புதப் படைப்பு மனித உடல். உடலுக்குள் இயங்கும் உறுப்புகள், அவயங்கள் மதிப்பு மிக்கவை. உடல் உறுப்புகள் பாதிப்படையும், பொது அதன் அருமை தெரிகிறது. உடல் நலமில்லாதவன்
அவனுக்கே சுமையாக தெரிகிறான். குடும்பத்தாருக்கும் சுமையாக உள்ளான். சமுதாயத்திற்கும் சுமையாக கருதப்படுகிறான். உடல் நோயை அறிவுள்ள செய்கைகளால் தீர்த்துக் கொள்ள முடியும். உடல்நலதுக்கான
கல்வியை பெற்று நோய்களில் இருந்து காத்துக் கொள்ள முடியும். நோய்கள் மனிதனின் மகிழ்ச்சியை கெடுத்து விடுகின்றன. வாழ்கையில் வசதிகளை பெருக்கிக் கொள்வது மட்டுமே இன்பத்தை தராது; மன ஆரோக்கியமே இன்பம் தரும். கர்வம், சுயநலம், பற்று, பேராசை, வெறுப்பு, கோபம், பொறாமை போன்றவற்றால் மன ஆரோக்கியம் கெடுகிறது. இதனால், உள்ளத்துக்குள் எப்போதும் ஒரு கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. மனதை அமைதியாக இருக்க இவை விடுவது இல்லை.
                                                                  மன அழுக்கு, தீய உணர்வு, கறைகள், தீய எண்ணங்கள், இன்பத்துக்கு தடையாக உள்ளன. ஞானத்துக்கு செல்ல விடாமல் தடுக்கின்றன. தியானத்தால் மனம் அமைதி அடைந்து, தன்னை பற்றி ஆய்வு நடக்கும் போது ஆன்மீக சாதனை துவங்கி விடும். எத்தனை கோவிலுக்கு சென்றாலும், சடங்குகளை செய்தாலும் தன்னை உணராத வரை ஆன்மீக சாதனை துவங்காது. தியானத்தில் வெற்றி பெற்று, ஞானம் பெற தகுதியானவராக நாம் மாற வேண்டும். இதற்காக இல்லறத்தை விட்டு ஓட வேண்டாம். இல்லறத்தில் இருந்து கொண்டே தர்மத்தின் வழி சென்று ஆன்மீக சாதனைகளை செய்ய முடியும். இல்லறம், துறவறம் இரண்டுமே உயர்ந்த தர்மங்களை கொண்டிருகின்றன.
                                                             குணங்களுக்கு அடிமையாகாமல் விடுதலை பெறுவதே பேரின்பம். நான் என்பது இந்த உடல் அல்ல. உடலை வீடாக கொண்டு வசிக்கிற உயிர். எண்ணங்களின் தொகுப்பாக உள்ள மனம் ஒரு கருவி. இக்கருவியை பயன்படுத்தி உலகத்தை அறிவதே ஆன்மீக சாதனை.

Friday 27 August, 2010

சிறுகதை

சைலாதி முனிவர் சிறுவனாக இருந்தபோது அவர் வீட்டிற்குத் துறவி ஒருவர் வந்து பிச்சை கேட்டார். கேலி செய்ய நினைத்த சைலாதி அந்தத் துறவியின் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கல்லைப் போட்டார். உணவுடன் அந்தக் கல்லையும் சாப்பிட்டு விட்டார் துறவி. ஆண்டுகள் உருண்டோடின. துறவி ஆனார் சைலாதி.
ஒரு சமயம் அவர் எமலோகத்திற்குச் சென்றார். எமனின் இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பாறை கிடந்தது.
"எதற்காக இவ்வளவு பெரிய பாறை இங்கே கிடக்கிறது?'' என்று கேட்டார் சைலாதி. "உங்களுக்காகத்தான் இந்தப் பாறை இங்கே உள்ளது. சிறுவனாக இருந்தபோது துறவியின் பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கல்லைப் போட்டீர். அந்தத் துறவியும் அதை அறியாமல் சாப்பிட்டார். ஒருவர் செய்த பாவம் அவரே அனுபவித்தால்தான் தீரும். இது விதி. நீங்கள் போட்ட அந்தச் சிறு கல் நாளும் வளர்ந்து பெரிய பாறையாக உள்ளது. நீங்கள் இறந்து இங்கே வரும்பொழுது இந்தப் பாறையை உடைத்துச் சிறிது சிறிதாக உங்களுக்கு உண்ணக் கொடுப்போம். பாறை முழுவதும் தின்றதும் உங்கள் தண்டனை தீரும்,'' என்றான்.
""நான் இங்கு வராமலேயே இந்தத் தண்டனையை நுகர வழி உள்ளதா?'' என்று கேட்டார் அவர்.
""இதே அளவு பாறையை நீங்கள் இந்தப் பிறவியிலேயே தின்று விட்டால் உங்கள் பாவம் தீரும்,'' என்றான் எமன்.
பூவுலகத்திற்கு வந்தார் அவர். அதே அளவுள்ள பாறை ஒன்றைத் தேர்ந்து எடுத்தார். அதை உடைத்துச் சிறிது சிறிதாக உண்ணத் தொடங்கினார். அந்தப் பாறையின் அளவு குறையக் குறைய எமலோகத் தில் இருந்த பாறையும் குறைந்து கொண்டே வந்தது.
பல ஆண்டுகள் முயற்சி செய்து அந்தப் பாறை முழுமையும் தின்று தீர்த்தார். எம லோகத்தில் இருந்த பாறையும் மறைந்தது. ஒருவழியாக முனிவரின் பாவமும் தீர்ந்தது.
இந்தச் சின்ன பாவத்திற்கே இந்த தண்டனை என்றால், பெரிய பாவங்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை காத்திருக்கும் தெரியுமா?

Wednesday 25 August, 2010

பகவானை அடையும் வழி?

த் விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஒருவித மனசாந்தியும், சந்தோசமும் ஏற்படுகிறது. அதுவும் பகவத் விஷயமென்றால், அதில் சிரத்தையும், அதை ரசிக்கக் கூடிய தன்மையும் இருந்தால் மிகவும் சிலாக்கியம் என்றனர்.
சொல்கிறவர்களும் மெய்யறிந்து சொல்வார்; கேட்பவர்களும் மெய்யறிந்து கேட்பர். இங்கு, மெய்மறந்து என்பது, குடும்பக் கவலையோ, மற்ற சிந்தனையோ இல்லாமல் ஒரு மணி, இரண்டு மணி நேரம் என மனம் அந்த விஷயத்திலேயே லயித்து விடுவது. இது எல்லாருக்குமே சாத்தியமாவதில்லை. எதெல்லாமோ ஞாபகம் வரும்; பாதியில் எழுந்து போய் விடுவர். பகவத் குணங்களை, புராணங்களை சொல்லும்படி பல இடங்களில் ஏற்பாடு செய்கின்றனர்; இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இஷ்டப்பட்டவர்கள் எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். தட்டு எடுத்து வரும் போது ஒரு ரூபாயும் போடலாம்; ஒன்றும் போடாமல் கற்பூரத்தை கண்ணில் ஒற்றி கும்பிடு போட்டும் விடலாம்.

ஆனால், இங்கு ஒரு ரகசியம் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புராணத்தை யார் சொல்கின்றனரோ, சொல்லும்படி ஏற்பாடு செய்தனரோ, யார் கேட்கின்றனரோ, அவர்களுக்கெல்லாம் பகவானின் அருள் கிடைக்கும். சகல நன்மைகளும் ஏற்படும் என்று பலன் சொல்வது வழக்கம். அதனால், இதுபோன்ற புராணங்களைக் கேட்க நிறைய கூட்டம் வரவில்லையே என்று ஏற்பாடு செய்தவர்களோ, கதை சொல்பவர்களோ சஞ்சலபடுவதில்லை.புண்ணியம் உள்ளவர்கள் வருகின்றனர் என்று தான் நினைப்பர்; அங்கு போகாதவர்களுக்கு தான் நஷ்டம்.

                  நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடுகின்றனர். நாளை என்பது நிரந்தரமா? ஒவ்வொரு நாளும் ஏதாவதுஒரு புண்ணியத்தை சேர்த்து விட வேண்டாமா?மச்சினன் அமெரிக்காவுக்கு போய் வந்த கதையை கேட்டுக் கொண்டிருந்தால் என்ன புண்ணியம்?
சிரத்தையுள்ளவர்கள் குரு மூலமாக வேத சாஸ்திரங்களைக் கற்று, அனுஷ்டானம் செய்து, ஸ்திரமான ஞானம், வைராக்கியம், பக்தி இவைகளை அடைந்து பரமாத்மாவிடம் மனதை வைக்கின்றனர். ஒவ்வொன்றாக நாளுக்கு நாள் விருத்தி அடைந்து பரம பக்தன் என்ற நிலையை அடைகிறான். அதன்பின் அவனுக்கு எல்லாமே பிரம்மம் தான். இப்படிப்பட்ட பக்தர்களிடம் பகவானும் பிரியம் வைக்கிறான்;அவர்களுடைய இதயத்திலேயே வாசம் செய்கிறான். மனிதனுக்கு உள்ள காம, குரோதங்களை ஒழித்து அவனை  ஒரு சத்பாத்திரமாக செய்கிறான்;அவனும் ஒரு சாதுவாகி விடுகிறான்.
                    
அஞ்ஞானம் விலகி, ஞானம் உண்டாகி, பகவானே கதி, அவனே உண்மைப் பொருள் என்பதை பக்தனும்அறிந்து கொள்கிறான். இப்படிப்பட்டவர்களில் ஒரு சிலர் முக்திப் பெற்று பிறவி பிணியிலிருந்து விடுபடுகின்றனர். எத்தனை தடவை பிறப்பது? எத்தனை தடவை மரிப்பது? ஞானிகள் பிறவியை விரும்புவதில்லை. இதைப் புரிந்து கொண்டு அவன் வழி தேடினால் நல்லது.

Sunday 15 August, 2010

பட்டினத்தார் அருளிய வாழ்க்கை தத்துவம். கேளுங்கள்.


Thursday 12 August, 2010

எது பாவம், எது புண்ணியம்


எது பாவம், எது புண்ணியம் என்பதையே புரிந்து கொள்ளாமல் நாட்களைக் கழிக்கின்றனர் மக்கள். நாட்கள் செல்லச் செல்ல ஆயுள் குறைகிறதே! பார்த்துக் கொண்டே இருக்கும் போதே வெள்ளி விழா என்கிறான்,பொன் விழா என்கிறான், மணி விழா என்கிறான், வைர விழா என்கிறான்.
மாலை, மாலையாகப் போட்டு போட்டோ எடுத்து, அதைப் பார்த்து மகிழ்ந்து போகிறான். இத்தனைக் காலத்தில் செய்த பாவங்கள் எத்தனை, புண்ணியங்கள் எத்தனை என்று யோசிப்பதே இல்லை.

அனால், மேலே ஒருத்தன் இருக்கிறான்; அவனிடம் ஒரு கம்ப்யுட்டர் ரே உள்ளது. இவனது பாவ, புண்ணியங்கள் விநாடிக்கு விநாடி அங்கே பதிவாகி விடுகிறது. அங்கே போனதும் தான் அதைப் பார்கிறான். 'அடேயப்பா! இவ்வளவு பாவமா செய்திருக்கிறேன்? எனக்கு தெரியவே இல்லையே! ஹி...ஹி...ஹி.. என்று இளிக்கிறான். 'டேய், இளிக்காதே! இதற்கும் தண்டனை உண்டு;அனுபவித்து விட்டுப் போ..'என்று கழுத்தைப் பிடித்து நரகத்தில் தள்ளுவர். புண்ணியம் செய்தவன் பாடு பரவாயில்லை; நல்ல உலகத்துக்குப் போய் விடுவான்.

அதனால், வாழ்நாளில் சிந்திக்க வேண்டும். பெரியோர் என்ன சொல்லியிருகின்றனர், அறநூல்கள் என்ன சொல்கின்றன, யாரை அண்டினால் நற்கதி கிடைக்கும், என்ன செய்தால் தீவினைகள் தொலையும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும். நம்மை நல்வழிப் படுத்தி, கரை சேர்க்க பல சாதனங்கள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். " மூத்தோர் சொல் அமுதம்" என்றனர்; அதைக் கேட்க வேண்டும்.

மனிதனுக்கு உதவுவதற்காக மூன்றை சொல்லியுள்ளனர்; ஏணி, தோணி, புராணி! ஏணி, மனிதன் மேல போக உதவுகிறது; அனால், தான் இருத்த இடத்திலேயே இருந்து விடுகிறது. தோணி, தண்ணீரை தாண்டி அக்கரையில் மனிதனை சேர்த்து விடுகிறது; தான் மட்டும் தண்ணீரிலேயே இருக்கிறது. புராணி, பகவத் குணங்களைச் சொல்லி, பக்தர்களை பகவானிடம் சேர வழிகாட்டுகிறார்; அனால், அவர் மட்டும் இங்கேயே புராணம் சொல்லி கொண்டிருக்கிறார்.

'அட, சரி தான் போய்யா! நீயும் உன் வேதாந்தமும்! என்று சிலர் சொல்லலாம். வேதமும், வேதாந்தமும், சாஸ்திரமும் சொல்கிறதே... அதைக் கேட்டு, அதன் படி நடக்கலாமே! நல்லவர்கள் காட்டும் வழி நடப்பது நல்லது தானே!
- வைரம் ராஜகோபால்

Monday 9 August, 2010

தலைக்கனம் பிடித்து அலைகிறீர்களா?


உலகத்தில் எத்தனையோ விசித்திரங்கள் உள்ளன; அவைகளைக் கண்டு ரசிக்கிறோம், பாராட்டுகிறோம், வியக்கிறோம். ஆனாலும், இவைகளை விட பெரிய விசித்திரம் ஒன்றுள்ளது. நம் கண்களால் தினமும் காண்கிறோம்; ஆனால், அதைப் பற்றி சிந்திப்ப தில்லை!
மனிதன் பிறக்கும் போது, ஒன்றுமே இல்லாமல் பிறக்கிறான். அதன் பின்னர், எப்படியெல்லாமோ வாழ்க்கை நடத்துகிறான். படிக்கிறான், பட்டம் பெறுகிறான், ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான், புதிது புதிதாக ஏதோ கண்டுபிடிக்கிறான். பணம் சம்பாதிக்கிறான், புகழ் சம்பாதிக்கிறான், பாராட்டுக்கள் பெறுகிறான். மேலும், வீடு, வாசல், கார், பங்களா, மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் இவைகளையெல்லாம் கண்டு பேரானந்தப்படுகிறான்.

எல்லார் மீதும் அன்பைப் பொழிகிறான். மனைவி, மக்கள், சுற்றத்தார் என்று மட்டுமில்லை... அவன் வீட்டு நாய், தென்னை மரம், வாழை மரம் முதலியவைகளின் மீதும் அன்பு செலுத்துகிறான். தினமும் பார்த்துப் பார்த்து ஆனந்தப்படுகிறான். ரொம்ப சரி... எத்தனை காலத்துக்கு இப்படி ஆனந்தப்படுகிறான்? அவனது வாழ்நாள் முழுவதும் ஆனந்தப்படுகிறான்!
இப்படி எவ்வளவு காலத்துக்கு இவைகளை அனுபவித்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்று சிந்திப்பதே இல்லை. ஏதோ கலியுகம் முடியும் வரை இப்படியே இருக்கப் போவதாக எண்ணம். இவன் எண்ணம் இப்படி இருக்கலாம். ஆனால், விதி என்பது எப்படி இருக்கும்? அது தான் தெரியாது! ஏதோ ஒரு நாள் படுத்துத் தூங்கியவன் எழுந்திருப்பதில்லை; ஒரு வாய் காபி குடித்தவன், அடுத்த வாய் காபி குடிப்பதில்லை; வெளியே சென்றவன் திரும்பி வருவதில்லை. யாரோ தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் போடுகின்றனர். வைத்தியர் வந்து பார்த்து கையை விரித்துவிட்டுப் போகிறார்.

ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்றால், யாரிடமும் சொல்லிக் கொள்வதுமில்லை; உத்தரவு கேட்டுக் கொள்வதுமில்லை; எந்த இடத்துக்குப் போகிறான் என்று சொல்வதுமில்லை. எங்கிருந்தோ வந்தான், எங்கேயோ போனான். எங்கே போனான்?
போன இடம் இருப்பவர்களுக்குத் தெரியாது; போனவனுக்கும் எங்கிருந்து வந்தோம் என்று தெரியாது; போகுமிடமும் தெரியாது. மீண்டும் ஒரு ஜென்மம்.

இது தான் பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய பலன். பாவமும் வேண்டாம், புண்ணியமும் வேண்டாம், பிறவியும் வேண்டாம் என்று சும்மா இருக்க முடிகிறதா? எதையோ செய்கிறான். புண்ணிய காரியமாகவே இருந்தாலும் புண்ணியத்தை அடைகிறான். அதன் பலனை அனுபவிக்க மீண்டும் பிறவி! அடக்கடவுளே மீண்டும் பிறவியா? வேண்டாம் என்றால் என்ன செய்வது? எந்த புண்ணிய காரியம் செய்தாலும், அதன் பலனை ஈசுவரார்ப்பணம் செய்து விடு என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போது தானே நற்கதி கிடைக்கும்.
உலகில், என்னுடையது, நான் என்ற அகம்பாவம் உள்ள வரையில்,விமோசனம் இல்லை. பிறப்பு, இறப்பு, பாசம், பந்தம் எல்லாம் இருக்கும். ஆனால், ஆசை விடுகிறதா? இதுவல்லவோ பெரிய விசித்திரம்!

Tuesday 3 August, 2010

துறவு


இந்த யுகத்தில், துறவறம் என்பதற்கு இல்லற துறவறமே சிறந்ததாகும். கிண்டலாய் சொன்னால், எல்லோரும் துறவி ஆகி விட்டால், பிறகு அவர்களுக்கு யார் தான் சோறு போடுவது. ஒரு இல்லறத்தை துறந்த துறவியை எடுத்துக் கொள்வோம். அத் துறவியானவர் காட்டிற்க்கோ, அல்லது ஒரு மடத்திலே சேர்ந்து துறவறம் பூண்டு தியானம், யோகம் முதலியவற்றால் ஞான நிலையை அடைந்தால் அது பெரும்பாலும் தன்னோடு முடிந்து விடுகிறது. அது தன்னுடய முக்தி நிலைக்கு கொண்டு செல்லும். பிறருக்கும் உபதேசம் செய்வார். இதில் இவர் தனக்கும் சமுதாயத்திற்கும் செய்த தொண்டில் மிக அதிக பங்கு, அவருக்கே அதிகம் இருக்கும். அனால்,

ஒரு இல்லறதுறவி,அதாவது சம்சார யுகத்தில் இருந்து கொண்டே துறவறம் மேற்கொள்வது, அவரால் இந்த சமுதாயத்திற்கே தொண்டின் பங்கு அதிகம். ஒரு கணவன் மனைவி குடும்பத்தில் இல்லற துறவறம் மேற்கொண்டால் அந்த குடும்பத்திலே இன்பம் நிறைந்து இருக்கும். இதில் துறவறம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால் உணர்ச்சியின் வழியில் செல்லாமல், அறிவின் வழியில் செல்வது. நல்லறம் செய்வது. தர்மத்தை செய்வது. ஆசைகளை ஒழிக்க வேண்டாம்/முடியாது, "ஆசைகளை சீரமைப்பது". இதையே ஞான மார்க்கம் என்றும் பொருள் கொள்ளலாம். இதனால் விளைவது நல்லொழுக்கமே! அவர்கள் யாரை பார்த்தும் பொறாமை கொள்ளமாட்டார்கள், சினம் கொள்ள மாட்டார்கள், உள்ளத்தில் எப்பொழுதுமே மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். கணவன் மனைவி பண்பட்டு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் நன் மக்களாய் இருப்பார்கள். அவர்களால் சமுதாயத்திற்கே மிகப் பெரும் நன்மை உண்டு. அவர்கள் ஒழுக்கத்தின் மறு உருவமாய் இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் யாருடைய உடலுக்கும், மனதிற்கும் துன்பம் தர மாட்டார்கள், துன்பப்படும் உயிர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். ஆனந்தத்திலே பேரானந்தம் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வது தான். இதுவே பேரானந்தம்.

இதை காட்டிற்கு தான் சென்று பெறத்தேவையில்லை. இல்லறத்தில் இருந்தே தியானம், யோகம் முதலியவற்றின் உதவியால் நிச்சயம் இந்த நிலையை அடையலாம். கணவன் மனைவி சேர்ந்து செய்யும் தர்மமே சிறந்தது. இதற்காக தான் இறைவன் ஆணையும், பெண்ணையும் சேர்த்து படைத்திருக்கிறான். முதலில், ஒரு பெண்ணை பார்த்தால், தங்கையாகவோ, தாயாகவோ பாவிக்கும் மனநிலை வேண்டும். மக்களின் மனநிலையில் துறவி என்பவன் காவி உடுத்தி, கழுத்தில் மாலை அணித்து, சிரிக்காமல், எந்நேரமும் மந்திர ஜெபம் செய்து கொண்டே, பெண்ணை ஏறெடுத்து பார்க்காமல், சாந்தமாக இருப்பதையே நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில், ஒரு துறவியானவன், தன்னை சுற்றயுள்ள போலிகளை துறந்து, ஆசைகளை சீரமைத்து அறிவின் விழியில் நிற்பவனே யாவன். இதை T SHIRT , Jeans அணித்து கொண்டும் உணரலாம். புலன்கள் வழியில் வரும் இன்பம் நிலையற்றது என்பது புரியும். மகிழ்ச்சியிலே பெரிய மகிழ்ச்சி பிறருக்கு கொடுத்து உதவுவதில் தான் இருக்கிறது என்பது புரியும். இதையே கர்ம யோகம் என்றும் கூறலாம்.

Saturday 31 July, 2010

பிரச்னை தீர வேண்டுமா ?

மனித வாழ்க்கை பல பிரச்னைகள் நிறைந்தது. இரவு நேரம் வந்ததும், இன்று என்னென்ன செய்தோம், எதெல்லாம் விட்டுப் போயிற்று, எதெல்லாம் நினைத்தபடி நடந்தது, எதெல்லாம் நினைத்தபடி நடக்கவில்லை என்று சிந்திக்கிறான் மனிதன்; மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போடுகிறான்.

அவைகளில் எதெல்லாம் நடக்குமோ தெரியாது. இப்படி பல பிரச்னைகளில் சிக்கி, என்ன செய்வது என்று தெரியாத ஒரு சிலர், "ஹூம்... எப்படியோ நடக்கட்டும். பகவான் விட்ட வழி...' என்று சொல்லி, பொறுப்பை பகவானிடம் ஒப்படைத்து விடுவர். நம்மை நம்பியுள்ள பக்தனின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறான் பகவான்; அதற்கு, சில வழிமுறைகளை சந்தர்ப்பங்களாக ஏற்படுத்துகிறான். பிரச்னைகள் தீர வழி வைக்கிறான். இதுதான் பகவான் விட்ட வழி என்கின்றனர்.

நம்பினவர்களுக்கு வழி செய்தும் கொடுக்கிறான்; தவறான வழியில் போகிறவனை தடுத்தும் நிறுத்துகிறான் பகவான். வழி தெரியாதவர்களுக்கு வழியும் காட்டுகிறான்; திக்கு திசை தெரியாமல் விழிப்பவர்களுக்கு, வேறு உருவில் வந்து, வழிகாட்டியாக அழைத்துச் செல்கிறான். சேரவேண்டிய இடம் வந்ததும் மறைந்து விடுகிறான்.
ஹரதத்தர் என்ற பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இருக்குமிடத்திலிருந்து சில மைல் தூரத்தில் இருந்த சிவன் கோவிலுக்கு, தினமும் போவது வழக்கம். ஒருநாள் மாலை, கோவிலுக்கு புறப்பட்ட போது, இடி, மின்னலுடன் காற்றும், மழையுமாக இருந்தது. அதில், கோவிலுக்கு போகும் வழியை தவற விட்டு விட்டார். எந்த வழியில் போவது என்று தெரியாமல், தடுமாறிக் கொண்டிருந்தார்.

அந்த சமயம், ஒரு இடையன் அங்கு வந்தான். "ஐயா... நீங்கள் கோவிலுக்கா போக வேண்டும்?' என்று கேட்டான். "ஆமாம்! ஆனால், வழி தெரியவில்லை...' என்றார் தத்தர். "சரி... நானும் அங்கே தான் போகிறேன்; என்னோடு வாருங்கள்...' என்றான் அவன். இருவரும் கோவில் வரை சென்றனர். அந்த இடம் வந்ததும், வழிகாட்டியாக வந்த இடையன் மறைந்து விட்டான். இவர் சுற்றும், முற்றும் தேடிப் பார்த்தார்; ஆளைக் காணவில்லை. அப்போது தான் அவருக்குப் புரிந்தது... வழிகாட்டியாக வந்தது இடையன் அல்ல; சாட்சாத் பரமேஸ்வரன் தான் என்று. கோவிலுக்குள் போய் பகவானை தரிசித்து, பலவாறு துதித்தார்.

பகவான் வழிகாட்டியாக வந்தார். சரி... ஆனால், ஏன் சுய உருவில் வராமல், இடையனாக வந்தார்? அதுதான் ரகசியம். "பகவான் எப்படி இருப்பார்!' என்று, மனதால் நினைக்கும்போது தான், பக்தி செய்ய முடியும். பரமேஸ்வரனே புலித்தோல், மண்டையோடு, நெருப்பு சட்டி, சூலம் எல்லாவற்றோடும் இவன் எதிரில் தோன்றினால் என்ன ஆகும்? ஆள் அலறி அடித்து ஓட்டமாக ஓடி விடுவான். பகவான் நேரில் வந்ததற்கு, பயன் எதுவும் இருக்காது. அதனால், மனித உருவில் வந்து, வழிகாட்டிவிட்டுப் போய் விடுகிறார். அந்தக் காலத்தில், பகவான் நேரில் தரிசனம் கொடுத்தார்; வரம் கொடுத்தார் என்றெல்லாம் புராணங்களில் உள்ளது. ஆனால், இந்தக் காலத்தில் அதெல்லாம் சரிப்பட்டு வராது. பகவான், இப்போதெல்லாம் நேரில் வர மாட்டார். மனித உருவில் வந்து, நல்வழி காட்டி விட்டுப் போய் விடுகிறார்.

Sunday 4 July, 2010

செலவு இல்லாமல் புண்ணியம் கிடைக்குமா ?

புண்ணியத்தை சுலபமாகத் தேடிக் கொள்ள, பகவான் நாமாவை சொல்லிக் கொண்டிருந்தாலே போதும்; அடிக்கடி சொல்ல முடியாவிட்டாலும், ஒரு நாளைக்கு, ஒரு தடவை சொன்னாலும் போதும். வாழ்நாள் முழு வதும் சொல்ல முடியாவிட்டாலும், கடைசி காலத்தில் சொன்னா லும் போதும்... சகல பாவங்களும் அகன்று, புண்ணிய லோகம் கிடைக்கும். இதற்கு புராணத்தில், "அஜாமிளன் சரித்திரம்' என்று ஒன்று உள்ளது. வேத சாஸ்திரம் அறிந்தவர் அஜாமிளன். தினமும் காட்டுக்கு சென்று சமித்து, தர்ப்பை எல்லாம் எடுத்து வந்து, பூஜை, வழிபாடு எல்லாம் முறையாக செய்து வருபவர். இப்படி அடிக்கடி காட்டுக்குப் போகும்போது, ஒரு சமயம் அங்கிருந்த வேடப் பெண்ணைக் கண்டார். ஏதோ ஒரு மனமாற்றம்; அவளிடம் ஈடுபாடு கொண்டார்.
நாளடைவில் இந்த சிநேகம் வலுப்பெற்றது. இவரது ஆசார அனுஷ்டானம் குறைந்தது. கடைசியில் வீடு, மனைவி யாவற்றையும் விட்டு விட்டு, அந்த வேடப் பெண்ணுடனேயே தங்கி விட்டார். அது மட்டுமா? அவள் மூலமாக நாலைந்து பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார். கடைசி பிள்ளைக்கு, "நாராயணன்' என்று பெயரிட்டார். காலம் ஓடியது. இவரது மரண காலம் வந்தது; படுத்து விட்டார். இவரை அழைத்துப் போக வந்து விட்டனர் எம தூதர்கள். அவர்களைக் கண்டதும், அஜாமிளன் நடுங்கிப் போய், பயத்தில் தன் பிள்ளையாகிய நாராயணனை, "நாராயணா!' என்று கூப்பிட்டு விட்டார். அவ்வளவுதான், தேவலோகத்தில் இருந்து இவரை அழைத்துப் போக அங்கே வந்து விட்டனர் விஷ்ணு தூதர்கள்.
இவர்களைப் பார்த்த எம தூதர்கள், "அடடா... நீங்கள் இங்கே வரலாமா? இவன் மகா பாவி. இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம்; நீங்கள் போய் விடுங்கள்...' என்றனர். அதற்கு, "இவனா பாவி? இவன் மகா புண்ணியசாலி. அதனால் தான் இவனை அழைத்துப் போக நாங்கள் வந்திருக்கிறோம். இவன் கடைசி காலத்தில், "நாராயணா!' என்று சொன்னதால், இவனுக்கு விஷ்ணுலோக பதவி கிடைக்கிறது...' என்றனர் விஷ்ணு தூதர்கள். இப்படி எம தூதர்களும், விஷ்ணு தூதர்களும் வாக்குவாதம் செய்து பார்த்துவிட்டு, சரி... இதை நம் தலைவரிடமே கேட்டு விடலாம் என்று போய் விட்டனர். நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்தார் அஜாமிளன்.
அப்போதுதான் அவருக்கு ஞானம் உண்டாயிற்று... "அடடா... நாம் இவ்வளவு காலம் எவ்வளவு பாவம் செய்துள்ளோம். இந்த நாராயண நாமமல்லவா நம்மைக் காப்பாற்றியது. அதன் பெருமையை இவ்வளவு நாளும் தெரிந்து கொள்ளாமலிருந்து விட்டோமே...' என்று, வருத்தப்பட்டார். வீடு, மனைவி, வேடச்சி, பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு, பத்ரிகாச்ரமம் சென்று நாராயணனைக் குறித்து தவம் செய்து, முக்தி பெற்றார் என்பது சரித்திரம்.
பகவான் நாமாவை மறக்காமல் சொல்லுங்களேன்... செலவு எதுவுமில்லாமல், புண்ணியம் கிடைக்குமே!

Saturday 3 July, 2010

கெட்டவர் நால்வர்...


ஒரு குருகுலத்தில் கற்றுத்தேர்ந்த இளைஞன் அவரிடம் விடைபெற்று திரும்பும் போது, குருவே! இத்தனை நாள் எனக்கு பல வித்தைகளையும், கல்வி கேள்விகளில் பயிற்சியும், தகுந்த புத்திமதிகளும் சொல்லி என்னை மனிதனாக்கினீர்கள். இவ் வுலகில் முழு மனிதனாக நான் வாழ என் மனதில் பதியுமாறு தகுந்த அறிவுரையை தயை கூர்ந்து சொல்லுங்கள், என வணங்கி கேட்டான். இளைஞனே! நீ விட்டுக்கெட்டவனையும், விடாது கெட்டவனையும், தொட்டு கெட்டவனையும், தொடாது கெட்டவனையும் மறக்காமல் நடந்துகொள். நீ நல்லவனாக வாழ்வாய் என்றார் குரு. குருகுலத்தில் இதுவரை சொல்லித்தராத புது விடுகதையை தனது குரு சொன்னதைக் கேட்டு இளைஞன் சற்று தடுமாறினான். குருவே! இதுபற்றி தாங்கள் என்னிடம் ஏதும் இதுவரை கூறியதில்லை. சற்று விளக்கமாக சொல்லுங்கள். அதன்படி நடந்து கொள்கிறேன் என்றான்.

மாணவனே! சொல்கிறேன் கேள். திருமால் வாமன வடிவெடுத்து மூன்றடி நிலம் கேட்டபோது எதை வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி, இறைவனின் ஒரு அடிக்கு இந்த பூமியையும், இன்னொரு அடிக்கு மண்ணுலகத்தையும், கடைசியாக மூன்றாவது அடிக்கு தன்னையே கொடுத்து கெட்டுப்போனவன்தான் விட்டுக்கெட்டவனான மகாபலி. அவனை ஒரு விஷயத்தில் நீ மறக்கக்கூடாது. வாக்கு கொடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். பிறர் என்ன கேட்பார்கள் என்பதை அறியாமலேயே வாக்கு கொடுப்பது தவறு. எனவே ஆராய்ந்து அறிந்து யாருக்கும் வாக்கு கொடு. அடுத்து விடாது கெட்டவனைப்பற்றி சொல்கிறேன். பாண்டவர்களின் தூதுவனாக கண்ணன் துரியோதனனிடம் சென்றான். ஐந்து காணி நிலமாவது தா என கேட்டான். துரியோதனனோ ஒரு அடி மண் கூட தரமாட்டேன் என சொல்லிவிட்டான். தனது சகோதரர்களுக்கு ஒரு சிறு இடத்தை விட்டுத்தராமல் போனதால் துரியோதனனும் அவனது சுற்றத்தாரும் மாண்டனர். எனவே இந்த மண்ணில் வாழ்பவர்களுடன் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடந்துகொள். அது உன் வாழ்க்கையை வளமாக்கும். தொட்டுக்கெட்டவன் யார் தெரியுமா? பத்மாசுரன் என்ற அரக்கன்தான்.

இவன் ஈஸ்வரனை நோக்கி கடும் தவம் செய்து தன் கை யார் தலைமீது படுகிறதோ அவர்கள் உடனே பஸ்மமாகிவிட வேண்டும் என்ற வரத்தை பெற்றான். இதை வைத்துக் கொண்டு இஷ்டப்பட்டவர்களை எல்லாம் கொன்றான். ஒருமுறை ஈஸ்வரனின் தலையிலேயே கை வைக்க அவன் முயன்றான். ஈஸ்வரன் தப்பி ஓடுவதுபோல நடித்தார். எல்லா ஆயுதங்களையும் இழந்து விட்டவர்போல பாவனை காட்டினார். அவனது அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். விஷ்ணுவும் அவரும் இணைந்து ஒரு தந்திரம் செய்தனர். விஷ்ணு அழகிய மோகினி ரூபம் எடுத்து பத்மாசுரன் முன் நின்றார். அவளது அழகில் மயங்கிய அசுரனிடம், நீ என்னைப்போலவே நடனமாட வேண்டும். அவ்வாறு செய்தால் உன்னை மணந்துகொள்கிறேன் என்றார். பத்மாசுரனும் மோகினியைப் போலவே நடனமாடினான். ஒரு கட்டத்தில் மோகினி தன் தலைமீது கை வைக்கவே பத்மாசுரனும் அவ்வாறே செய்தான். அந்த இடத்திலேயே பஸ்மமானான். இதுபோல பெண்களின் மீது மோகம்கொண்டு உன் தலையில் நீயே மண்ணை போட்டு கெட்டு போகாதே. தொடாமல் கெட்டவன் பற்றி கேள். சீதையின் மீது ஆசை கொண்டு அவளை சிறை எடுத்துச்சென்றான் ராவணன். பிற பெண்களை அவர்களது அனுமதியின்றி தொட்டால் ராவணனுக்கு அழிவு ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக அவள்மீது தன் கைவிரல் நகம்கூட படாமல் தொடாமலேயே அவளை தன் இச்சைக்கு வற்புறுத்தினான். அந்த இலங்கேஸ்வரன் ராமனின் பாணத்திற்கு பலியானான். இவனை போல பிறன்மனை நோக்காமல் உன் மனைவியுடன் ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்திரு, என்றார்.

மாணவனின் மனம் அமைதி பெற்றது. குரு சொன்னபடியே இந்த நால்வரையும் மனதில் இருத்தி நிம்மதியாக வாழ்க்கை நடத்தினான்.