நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Sunday 30 May, 2010

கோவிலுக்குச் செல்வது ஏன்?



"ஆலயம் தொழுவது சாலவும் நன்று!' என்று ஒரு வாக்கியம் உள்ளது. நாம் காலை எழுந்தது முதல், இரவு வரையில், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம். இவைகளோடு, கோவிலுக்கு போவது என்ற பழக்கத்தையும் வைத்துக் கொள்வது நல்லது.
பகல் முழுவதும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் அலை மோதுகிறது. இரவு வந்ததும், கோவிலுக்குச் சென்று, பகவானிடம் மனதை வைத்து, சிறிது நேரம் தரிசனம் செய்யும் போது, மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் லயித்திருக்கும்; மனதுக்கும் அமைதி கிடைக்கும். அதே சந்தர்ப்பத்தில், பகவானிடம், "பகவானே... நான், பிறர் கையை எதிர்பாராமல், வாழ்நாளை போக்கி விட வேண்டும்!' என்று பிரார்த்தித்து கொள்ள சொல்லியிருக்கிறது. அதனால், தினமும் ஒரு முறையாவது, கோவிலுக்குச் சென்று வர வேண்டும்.
பிறருக்காக உழைக்கிறோம்; சம்பாதித்து போடுகிறோம்; குடும்பத்தை கவனிக்கிறோம். இதெல்லாம் ஒரு கடமை. அதேபோல தன் நன்மைக்கும், ஆத்ம லாபத்துக்கும், பரலோக சுகத்துக்கும் சுலபமான வழி, பகவானை வழிபடுவது தான்.
"பகவான் தான் எங்கும் இருக்கிறாரே... கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? வீட்டிலிருந்து கொண்டே அவரை நினைத்தால் போதாதா?' என்று வேதாந்தம் பேசுவதில், பிரயோஜனமில்லை.
பூமியின் அடியில் எங்கும் நீர் நிறைந்துள்ளது; ஆனால், நமக்கு தண்ணீர் வேண்டுமானால், ஒரு கிணற்றிலிருந்தோ, குளத்திலிருந்தோ தான் எடுக்க வேண்டியுள்ளது. பசுவின் மடியில் பால் உள்ளது. பால் வேண்டுமானால், அதன் மடியிலிருந்து தான் பால் கறக்க முடியும்; அதன் கொம்பை திருகினால், பால் வருமா?
அதுபோல எங்கும் கடவுள் இருக்கிறார் என்றாலும், நாம் நாலு பக்கமும் சுற்றி, சுற்றிப் பார்த்தாலும், கடவுளைக் கண்டோம் என்று சொல்ல முடியாது. கோவிலுக்குப் போய், கடவுளை தரிசித்தால் தான், மன நிம்மதி கிடைக்கும்.
கோவிலுக்குள் உள்ள தெய்வம் வெறும் சிலையல்ல; அது மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, தெய்வ சாந்நித்யம் கொண்டது. கண்ணுக்கு தெரியாத கடவுளை, அந்த விக்ரகத்தில் ஆவாகனம் செய்து வைத்திருக்கின்றனர். அதற்கு காலா காலத்தில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தூப தீப நைவேத்தியம், கற்பூர ஆரத்தி என்று வரிசையாக உபசாரங்கள் உள்ளன.
இது, ஒவ்வொரு நாளும் ஆறு காலம், நான்கு காலம், மூன்று காலம் என்று நியமனம் செய்து, அதன்படி நடந்து வருகிறது. அதனால், ஏதாவது ஒரு கால பூஜையையாவது பார்த்து, தரிசனம் செய்து வருவது நல்லது.
இப்பவும், சில பெரியவர்கள், சாயந்திரம் அநுஷ்டானம் முடிந்ததும், "சந்திகாலம் ஆகிவிட்டது; கோவிலுக்குப் போய் சந்திகால தீபாராதனை பார்த்து விட்டு வந்து விடு கிறேன்...' என்று சொல்லிவிட்டு, கோவிலுக்கு போய் தரிசனம் செய்துவிட்டு வருவர்.
ஒரு நாள் பொழுதை கழிக்கும் போது, கடைசியாக தெய்வ தரிசனத்தோடு முடித்தால், வாழ்நாளில் பெரும்பாலான புண்ணியத்தை அடையலாம்.

Saturday 22 May, 2010

சாரதாதேவியார் ஆன்மிக சிந்தனைகள்

* ஒரு மனிதனுக்கு நல்லகாலம் வந்தால் மட்டுமே அவன் மனம் ஆன்மிக
விஷயத்தில் நாட்டம் கொள்ளும்.
* ஆசைகள் அனைத்தும் நம்மை விட்டு எப்போது விலகிச் செல்கிறதோ அந்தப்
பிறவிதான் நம்முடைய கடைசிப் பிறவியாகும்.
* கவலைப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. உலகைப் படைத்தவன் யாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறான். நல்லது நடக்கும் என்று பூரணமாக நம்பி அவனைச் சரணடையுங்கள்.
* நம்மை விட்டு என்றும் நீங்காத உறவு கடவுள் மட்டுமே. அவனுடைய கருணைக்காக மனம் ஒன்றி வழிபடுங்கள். நிச்சயம் பிரச்னைகள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்று மகிழ்வீர்கள்.
* முதலில் ஒழிக்கவேண்டியது சோம்பல் மட்டும் தான். அதிகாலையில் எழுந்து தியானப்பயிற்சியில் ஈடுபடுவதால் அபரிமிதமான ஆற்றலை நாம் பெற்று விடமுடியும்.
*பணியிடத்தில் ஒவ்வொரு வேலையையும் தவமாக எண்ணி புனிதமான பணியாற்றுங்கள்.
* நாம் அனைவருமே தெய்வீகக்குழந்தைகள். வாசனை மிக்க மலர்களை ஆண்டவன் விரும்பி ஏற்பது போல, நம்மையும் கடவுள் அன்போடு அரவணைத்துக் கொள்வார்.

Friday 21 May, 2010

பகவத் கீதை/சித்தர்கள் சூச்சுமம்

பகவத் கீதை - பார்க்க வேண்டிய ஒன்று



சித்தர்கள் பாடலில் சூச்சுமம் ஏன்?

கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டீர்களா?



ந்தப் பெரிய உலகத்தில், கோடானு கோடி ஜீவராசிகளை படைத்தான் பகவான். அவன், அப்போது படைத்த ஜீவன்கள் தான் இப்போதும் உள்ளன; அதன் பிறகு, புதிதாக ஜீவன்களைப் படைக்கவில்லையாம். முன்பு பூமியில் உண்டான, ஜீவன்கள்தான் மேலே போகிறது; கீழே வருகிறது. இப்படி சக்கரத்தில் மேலும், கீழுமாக சுற்றிச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இவைகளில் ஏதோ ஒன்றிரண்டு மட்டும் தப்பித்து, முக்தி என்ற பிறவா நிலையை அடைந்து, பகவானோடு சேர்ந்து, சுகமாக இருக்கிறது. அதாவது, பேரின்பம் பெறுகிறது என்பர். மற்ற ஜீவன்களெல்லாம் ஏதோ ஒரு சரீரத்துடன் உலகெங்கும் பரவி உள்ளது.இவ்வளவு ஜீவன்களும், தங்கள் சரீரத்தை, ஒரு நாள் விட வேண்டி வருகிறது; அதைத் தான் மரணம் என்றனர். இந்த மரணத்துக்குக் காரணம் எமன் என்றனர். அவன் தான் எமலோகத்துக்கு அதிபதி; யார், யாரை எப்போது கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடுவதும் அவன்தான். இவனிடம் வந்து சேர்ந்தவர்களை விசாரணை செய்து, அவரவர்களின் பாவ, புண்ணியத்துக்கு தகுந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதும் அவன்தான். யாராய் இருந்தாலும், முதலில் அவனிடம் ஆஜராகி, விசிட்டிங் கார்டை காண்பித்தால், அவனைப் பற்றிய விபரங்களை தன் கணக்குப்பிள்ளையான சித்ரகுப்தனிடம் கேட்டு அறிந்து, தண்டனை வழங்குகிறானாம். இந்த உலகில் எங்கெல்லாமோ உள்ள ஜீவன்களை ஒரே சமயத்தில் கணக்கு பிசகாமல், நேரம் தவறாமல் அவன் எப்படி கொண்டு போகிறான் என்று ஒரு கேள்வி!

எமனிடம் உள்ள எம தூதர்கள் அண்மாதி சித்திகள் என்று சொல்லப்பட்ட சக்தி கொண்டவர்கள். அவர்கள் ஒரே நேரத்தில் அளவற்ற உருவம் எடுக்க வல்லவர்களாம். இதுபோன்ற தூதர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனராம். அதனால், இவர்கள் பல பகுதிகளாக பிரிந்து, பல தேசங்களுக்குச் சென்று, யார், யாரை எப்போது பிடித்து வர வேண்டுமோ, அப்படி பிடித்து வந்து விடுகின்றனர்.

ஆயுள் முடிந்தவரிடம் போய், "ஐயா! இந்த நிமிடத்துடன் உன் ஆயுள் முடிந்தது; வா... போகலாம்!' என்று சொல்லிக் கொண்டிருப்பதில்லை. இந்த எம தூதர்கள் வேறு ஏதாவது ஒரு சாதனத்தைப் பற்றிக் கொண்டு, ஆயுள் முடிந்த ஜீவன்களை மரணமடையச் செய்து, அந்த ஜீவன்களை, கட்டி இழுத்து செல்வராம்! அப்படி என்ன சாதனம் இவர்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டால், ஆகாய விமானம், ரயில், லாரி, பஸ், மோட்டார் வாகனங்கள், மழை, வெள்ளம், போன்றவைகள்தான் இவர்களுடைய சாதனம்! இப்படியாக சொர்க்கமோ, நரகமோ அவரவர் போக வேண்டிய இடங்களுக்கு சென்றதும், அங்கங்கே செய்யப்படும் மரியாதையை ஏற்று, சுகமோ, துக்கமோ அனுபவிப்பராம். பிறகு, பாவ, புண்ணியம் தீர்ந்ததும் மறுபடியும் இங்கேதான் பூலோகத்துக்கு - வருவராம். பிறகு, இருக்கவே இருக்கிறது பூலோக, சுக, துக்கம். இதில் ஒரு சவுகரியம்... புதிதாக பிறந்தவர்கள், முன் ஜென்மத்தில் யாராக இருந்தார் என்பது தெரியாமல் உள்ளது; அதுவரையில் நல்லதாகப் போயிற்று. இது தெரிந்து விட்டால், "டாய்... நீயாடா? வாடா இப்படி – வுட்டேனா பார்!' என்றெல்லாம் ஆரம்பித்து விடுவர். இப்போது, "நீ யாரோ, நான் யாரோ!' அதுவரையில் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Sunday 16 May, 2010

எது முக்கியம்?

சார்... நாளைக்கு எனக்கு 60 வயதாகிறது. சஷ்டியப்தபூர்த்தி சாந்தி நடக்கிறது. நீங்கள் அவசியம் வரவேண்டும்!'
'ஓ! அப்படியா! ரொம்ப சந்தோஷம். பகவான் தீர்க்காயுசை கொடுக்கட்டும்!'
இப்படி பேசிக் கொள்வதுண்டு. சரி... இந்த 60 வயது என்பது 0கடந்த காலம்; எதிர்காலம் எவ்வளவு என்று தெரியாது. வருடம் போக, போக ஆயுள் நாள் குறைகிறது; வயது கூடுகிறது.
'இந்த 60 வருஷ காலத்தில் என்ன செய்திருக்கிறாய்?' என்று கேட்டால், 'இரண்டு பிள்ளைகளை பெற்று, படிக்க வைத்து, நல்ல வேலையில் சேர்த்திருக்கிறேன். இரண்டு பெண்களுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறேன்!' என்று பெருமையாக சொல்வர்.
'அதுசரி... உங்களுக்காக என்ன செய்து கொண்டீர்கள்?' என்று கேட்டால், 'ஓ... இங்கே ஒரு வீடு கட்டியிருக்கேன். பாங்க்லே டிபாசிட் இருக்கு. வட்டி வருகிறது. சாப்பாட்டுக்கு கவலையே இல்லை!' என்கிறார்.
'நான் அதை கேட்கவில்லை சார்! அதெல்லாம் இந்த லோகத்து சுகத்துக்கானவை; பரலோக சுகத்துக்கு என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டால், 'பூ! அதுவா... அது இனிமேல் தான்... ஏதாவது தான – தர்மம் செய்து, புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும்!' என்கிறார்.
'இனிமேல் தான்' என்பது, எப்போது? இவர் நாள், நட்சத்திரம் பார்த்து தான தர்மம் செய்து, புண்ணியம் சம்பாதிக்கும் வரையில், 'அவன்' விட்டு வைப்பான் என்பது என்ன நிச்சயம்?
தன் குடும்பத்துக்கு செய்ததெல்லாம் தன் கடமையை செய்ததாகும். தனக்கு பரலோக சுகத்துக்காக ஏதாவது செய்து, புண்ணியம் சேர்த்திருந்தால், அது உதவும். இந்த புண்ணியத்தை தான் தேடி வைத்துக் கொள்ள வேண்டும். புண்ணியம் சம்பாதித்திராவிடினும் பரவாயில்லை; பாவத்தை செய்யக் கூடாது.
இந்த பாவத்தின் பலன்களை, செய்தவனே தான் அனுபவிக்க வேண்டும். புண்ணியத்தை கூட தானம் செய்யலாம். 'காவிரி ஸ்நான புண்ணியத்தை உனக்கு தானம் செய்கிறேன். கங்கா ஸ்நான நலனை உனக்கு தானம் செய்கிறேன். விரதம் அனுஷ்டித்த பலனை உனக்கு தானம் செய்கிறேன்!' என்று தானம் செய்யலாம்; ஆனால், பாவம் செய்த பலனை தானம் செய்ய முடியாது.
வாழும் காலத்திலேயே குடும்பத்தை காப்பாற்றுவதுடன், தன் பரலோக சுகத்துக்கும் ஏதாவது புண்ணிய காரியங்களை அவ்வப்போது செய்துவிட வேண்டும். அந்த சின்ன, சின்ன புண்ணியமே ஒரு மலை போலாகி, பரலோகத்தில், காப்பாற்றும். இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வயது முக்கியமல்ல; புண்ணியம் தான் முக்கியம்.

way to பேரின்பம்

மனம் எதில் எல்லாமோ ஈடுபடுகிறது; அப்படி ஈடுபடும் எல்லா விஷயங்களுமே மனதை திருப்தி செய்து விடுகிறதா என்று பார்த்தால், அதுதான் இல்லை. இதை விட இன்பமானது இன்னொன்று இருக்கிறதா என்று தேடுகிறது. இப்படி எத்தனை நாள் எதைத் தேடுவது? பிரச்னை தான். ஆனால், பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, பகவத் தியானத்தில் திளைத்து விட்டால், அந்த பரமாத்ம சொரூபத்தை தியானிக்க ஆரம்பித்து விட்டால், மனம் வேறு எதிலுமே செல்லாது; வேறு எதையுமே விரும்பாது. இது ஞானிகளுடைய அனுபவம். இதையே பரமானந்தம் என்கின்றனர். இந்த ஆனந்தம் எப்படி இருக்குமென்று கேட் டால் சொல்லத் தெரியாது! அனுபவித்தால் தான் தெரியும். இப்படிப்பட்ட பரமானந்தத்தை அனுபவிப்பவர்கள் மற்ற சிற்றின்பங்களை பற்றி சிந்திக்கவும் மாட்டார்கள்; அதில் ஈடுபடவும் மாட்டார்கள்.
கிணறு மட்டும் உள்ள ஊரில் இருப்பவன் கிணற்று நீரைக் கொண்டு தான் திருப்தியடைய முடியும். ஆனால், நதி நீர் உள்ள இடத்தில் இருப்பவன் நதி நீரைத் தான் விரும்புவான். அதுபோல அஞ்ஞானத்தில் உள்ளவன் உலக இன்பங்களிலேயே திருப்திபடுகிறான். ஞானியாக உள்ளவன் பேரின்பத்தையே நாடுகிறான்; பேரின்பத்திலேயே திருப்தியடைகிறான். இப்படி உலக சுகங்களை விட்டு, தியானம், தவம் மூலம் பேரின்ப நிலையை அடையவே மகான்கள் முயன்றிருக்கின்றனர். பட்டினத்தாரும், பத்ரகிரியும், சகல செல்வங்களையும், சுகங்களையும் துறந்து சன்னியாசிகளாகி, பேரின்பம் எய்தனர் என்பது சரித்திரம்.
முற்காலத்தில் அரசர்கள் எல்லாரும், பிள்ளைக்கு வயது வந்ததும் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு, மரவுரி தரித்து கானகம் சென்று தவம் செய்து நற்கதி பெற்றனர். அவர்களெல்லாம் சிற்றின்ப வீட்டை விட்டுப் பேரின்ப வீட்டை அடையச் சென்றனர்; அடைந்தனர்.
நாம், இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு சின்ன வீட்டில் குடியிருந்து, ஓடி, ஆடி சம்பாதித்து, எதையெல்லாமோ சாப்பிட்டு, காலங்கழிப்பதையே சுகம் என்று நினைக்கிறோம். ஆனால், பேரின்ப வீட்டின் சுகம் எப்படியிருக்கும் என்பது அனுபவப் பூர்வமாகத் தெரியாவிட்டாலும் பெரியோர், வேத சாஸ்திர புராணங்கள் சொல்வதன் மூலமாகவாவது யோசித்துப் பார்ப்பதுமில்லை; அதை அடைய முயற்சி செய்வதும் இல்லை.
முப்பத்தியிரண்டு பிளாட்கள் கொண்ட ஒரு அபார்ட்மென்ட் கட்டடத்தில் ஓரு பிளாட் வாங்கி, அந்த ஒரு பிளாட்டில் குடும்பம் நடக்கிறது; இதையே பெரிய இன்பமாக நினைக்கிறான்.
வாசலில் ஒரு பிச்சைக்காரன், 'எட்டடி குச்சுக்குள்ளே கந்தைய்யா எத்தினி நாளிருப்பேன்?' என்று பாடிவிட்டு, கையிலிருந்த கட்டையை டர்...ர்...ர் டர்...ர்... என்று அடிக்கிறான். ஒரு பெரியவர், உள்ளேயிருந்து வருகிறார். இவர் கிராமத்தில் பெரிய வீட்டில் வாழ்ந்தவர். டவுனில் பையன் பிளாட் வாங்கி குடித்தனம் நடத்துகிறான்; சில நாள் தங்கிவிட்டுப் போகலாம் என்று வந்திருந்தார். இவர் வெளியில் வந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு ஐம்பது பைசா போட்டார்!
அவனைப் பார்த்து, 'நீ சரியாக பாடவில்லை. அதனால், ஐம்பது பைசாதான்; சரியாக பாடியிருந்தால் ஒரு ரூபாய் போட்டிருப்பேன்!' என்றார். அவனுக்குப் புரியவில்லை... 'எப்படி பாடியிருக்க வேண்டும்?' என்று கேட்டான். அதற்கு பெரியவர், 'எட்டடிக் குச்சுக்குள்ளே கந்தைய்யா... எத்தினி பேரிருப்போம் முருகைய்யா... எத்தினி பேரிருப்போம்!ன்னு பாடணும்...' என்று பாடிக் காட்டினார். அவனுக்கும் அது சரியென்றுபட்டது. அதாவது, இந்த சிறிய வீட்டையும், இந்த அற்ப சுகத்தையுமே பெரிதாக நினையாமல், அந்த பேரின்ப வீட்டையும், பேரின்ப சுகத்தையும் அடையவே மனிதன் பாடுபட வேண்டும், அடைய வேண்டும் என்றனர்; முடியுமா பாருங்கள்.